மஞ்சூர் குந்தா வனப்பகுதியில் 250 மரங்கள் வெட்டி கடத்தல்! நீலகிரி உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் விசாரணை
மஞ்சூர் குந்தா வனப்பகுதியில் 250 மரங்கள் வெட்டி கடத்தல்! நீலகிரி உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் விசாரணை
UPDATED : ஆக 11, 2026 06:53 AM
ADDED : ஆக 10, 2026 05:22 PM

மஞ்சூர்: நீலகிரி வனக்கோட்டம், குந்தா வனச்சரகத்தில் வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் மர வியாபாரிகளுடன் கை கோர்த்து, மரங்களை வெட்டி இரவோடு, இரவு கடத்திய சம்பவம் குறித்து, உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் விசாரணைக்கு நடந்து வருகிறது.
நீலகிரி வனகோட்டம், குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பை கொண்டதாகும். இங்கு பட்டியல் வகை மரங்கள் உட்பட, கற்பூரம், சவுக்கு மற்றும் அன்னிய மரங்கள் அதிகளவில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அன்னிய மரங்களை வெட்டி அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டதால், கற்பூரம் மற்றும் சவுக்கு மரங்களை தனியார் மர வியாபாரிகளுக்கு டெண்டர் விட்டு வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், கடந்த காலங்களில், சில பகுதிகளில் விதிகளை மீறி வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் மர வியாபாரிகளுடன் கை கோர்த்து, மரங்களை வெட்டி இரவோடு, இரவு கடத்தியதாக அரசுக்கு புகார் சென்றுள்ளது.
வனப்பகுதியில் ஆய்வு
இந்நிலையில், தாய்சோலை, மீக்கேரி பெட்டு வனப்பகுதியில் சமீபத்தில் பொறுப்பேற்ற வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், குந்தா வனத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், இரண்டு கி.மீ., சுற்றளவுக்கு, கற்பூரம், சீகை மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் , உதவி வனப்பாதுகாவலர் கிருபாகரன் உள்ளிட்ட வனத்துறை குழுவினர் நேரில் சென்று சம்மந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் தனி கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
250 மரங்கள் வெட்டி கடத்தல்
முதற்கட்ட விசாரணையில், 'தாய்சோலை, மீக்கேரி பெட்டு வனப்பகுதி பீட்டில் பணிபுரிந்து வந்த கார்டு, வாச்சர்கள் சேர்ந்து, உள்ளூர் மர வியாபாரிகள் சிலருடன் கை கோர்த்து மரங்களை வெட்டி லாரியில் கடத்தி வெளியூர் மில்களுக்கு அனுப்பி உள்ளனர். மரங்களை மாலை, 6:00 மணிக்கு மேல் லாரிகளில் கொண்டுள்ள கூடாது என்ற விதிகளை இருந்தும், இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் லாரிகளில் கடத்திய சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவி வனப்பாதுகாவலர் கிருபாகரன் கூறுகையில், ''குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட தாய்சோலை, மீக்கேரி பெட்டு வனப்பகுதியில், 250 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அங்கு பணிபுரிந்த வனத்துறை ஊழியர்கள் மரக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
