/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
/
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
அபாயகர மரங்களை அகற்ற போதிய ஆய்வுகள் இல்லை மக்கள் அதிருப்தி! மனுக்களுக்கு விரைவில் அனுமதி தந்தால் சேதம் குறையும்
ADDED : ஜூன் 19, 2025 07:30 AM

ஊட்டி: 'நீலகிரியில் அபாயகரமான கற்பூர மரங்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து சில நாட்களாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்தாலும் அவ்வப்போது பலத்த காற்று வீசுகிறது. பலத்த காற்றுக்கு ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் ஏராளமான இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மின் கம்பங்கள்; கம்பிகள்; டிரான்ஸ்பார்மர்கள் மீது மரங்கள் விழுந்தால், பல நாட்களுக்கு குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கி விடுகின்றன. மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன.
விழுந்த 140 மரங்கள்
மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்த நாளிலிருந்து, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார், பகுதிகளில், 140 பெரிய அளவிலான மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு மக்கள் இரவில் மிகவும் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது மரங்கள் அறுத்து அகற்றினர்.
எனினும், மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான அபாயகரமான கற்பூர மரங்கள் எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளன. இதனால், மக்கள் பருவமழை சமயத்தில் அச்சத்துடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முறையாக ஆய்வு இல்லை
பல இடங்களில், 'குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள், நெடுஞ்சாலை ஓரங்கள்,' என, பல பகுதிகளில் பழமையான கற்பூர மரங்கள் வானுயர அளவுக்கு அபாயகரமான நிலையில் உள்ளன. இத்தகைய மரங்களை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கமிட்டிக்கு மனுக்கள் அளிக்கப்படுகிறது. அந்த கமிட்டி அந்தந்த பகுதியில் உள்ள வருவாய் துறையினரை ஒருங்கிணைத்து ஆய்வு மேற்கொண்டு மரத்தை அகற்ற வேண்டும். ஆனால், பல இடங்களில் சரிவர ஆய்வு மேற்கொள்ளாததால் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுக்களை ஆய்வு செய்து, உடனடியாக அனுமதி அளித்தால், வரும் நாட்களில் தீவிரமடையும் மழையின் போது பாதிப்புகள் குறையும்.