/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கியூ பிரிவு போலீசார் - வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இணைந்து களம்
/
கியூ பிரிவு போலீசார் - வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இணைந்து களம்
கியூ பிரிவு போலீசார் - வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இணைந்து களம்
கியூ பிரிவு போலீசார் - வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இணைந்து களம்
ADDED : பிப் 06, 2024 12:00 AM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில், கியூ பிரிவு போலீசார், வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கேரளா மாநிலம் வயநாடு, கண்ணுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் உள்ளது. மாவோயிஸ்ட்களை, தண்டர்போல்ட் என்னும் சிறப்பு படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, தமிழகத்தில் கியூ பிரிவு போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், கேரளா மாநிலம் வயநாட்டில் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். அதே போல், கண்ணுார் பகுதியிலும் மாவோயிஸ்ட்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது; இதில் மாவோயிஸ்ட்டுகள் வனத்துக்குள் தப்பி சென்றனர்.
கேரளா வனப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்கள், மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கோவையில் உள்ள தமிழக கேரளா மாநில எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில், போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு, கண்காணித்தும் வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில், கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'அத்திக்கடவு, பில்லுார், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதுார், காலன்புதுார், செங்குட்டை, குட்டை புதுார், பட்டிசாலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் வனத்துறையினருடன் இணைந்து போலீசார், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மலை கிராமங்களில் உள்ள பழங்குடியினர்களிடம் மாவோயிஸ்ட்கள் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தினோம்' என்றனர்.---