/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவர வளர்ச்சியில் பஞ்ச பூதங்களின் பங்கு; ஊட்டியில் நடந்த சுற்றுச்சூழல் பயிலரங்கில் தகவல்
/
தாவர வளர்ச்சியில் பஞ்ச பூதங்களின் பங்கு; ஊட்டியில் நடந்த சுற்றுச்சூழல் பயிலரங்கில் தகவல்
தாவர வளர்ச்சியில் பஞ்ச பூதங்களின் பங்கு; ஊட்டியில் நடந்த சுற்றுச்சூழல் பயிலரங்கில் தகவல்
தாவர வளர்ச்சியில் பஞ்ச பூதங்களின் பங்கு; ஊட்டியில் நடந்த சுற்றுச்சூழல் பயிலரங்கில் தகவல்
ADDED : ஜன 10, 2024 10:35 PM

ஊட்டி : 'தாவர வளர்ச்சியில் 80 சதவீதம் பஞ்சபூதங்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.
ஊட்டியில் தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர்கள்; மாணவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் நடந்தது.
மத்திய சுற்றுச்சூழல் துறை காலநிலை மாற்றம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் நீடித்த நிலை தன்மைக்கான வாழ்வியல் பயிற்சி களம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய பசுமை படை ஆசிரியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 10 பள்ளிகளில் இருந்து, 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''இயற்கை இல்லாமல் எதிர்காலம் இல்லை என்பதனை உணர்ந்து, மாணவர்கள் வாழ்க்கையை முன்னெடுக்க வேண்டும். இயற்கையை பாதுகாப்பது, மாணவர்களின் கடமை,'' என்றார்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் பேசுகையில், ''அனைத்து பள்ளிகளும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையிலும், இயற்கையோடு இணைந்த பள்ளிகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும்,'' என்றார்.
சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையக் கள அலுவலர் குமரவேலு, ''அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தால், சூழல் பணிகள் அதிகம் மேற்கொள்ள இயலும். அதனால், மாணவர்களுக்கு பயன் ஏற்படும்,'' என்றார்.
தேசிய பசுமைப்படை சூழல் ஆர்வலர் ராபர்ட் பேசுகையில்,''ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பால் மட்டுமே, மாணவர்களை சிறந்த சூழல் பாதுகாப்புமிக்க குடி மக்களாக மாற்ற முடியும்,'' என்றார்.
கருத்தாளர் முனைவர் துரைராஜூ சுந்தரம், ''அறிவியலும், பாரம்பரியமும் இணைந்த இயற்கை விவசாயத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் ஆசிரியர்கள் மற்றும் மணவர்களின் பங்கு மிக முக்கியம். தாவர வளர்ச்சிக்கு, 80 சதவிகிதம் பஞ்சபூதங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை விவசாயத்தில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பங்கு முக்கியமானது. மண்வளத்தின் நுண்ணுயிர் தன்மை அழியாமல் பாதுகாப்பது இன்றைய அவசியம்.
நீலகிரியின் உயிர் சூழலின் எதிர்காலம், இயற்கை விவசாயத்தை சார்ந்துள்ளது. இயற்கை விவசாயம், நீலகிரி மாவட்டத்தின் நீடித்த நிலை தன்மைக்கும், சமவெளி பகுதியில் உள்ள விவசாய வளர்ச்சிக்கு மிக அவசியம்,'' என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோபினா ஜேஸ்பால், 'வீட்டில் இருந்து வெளியேறும் இயற்கை கழிவுகளை கொண்டு, ஆரோக்கியமான உரங்கள் உற்பத்தி செய்வது, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுகளை எவ்வாறு மறுசுழற்சிக்கு உட்படுத்துவது,' என்பதை குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுவாமி வியாசா பிரசாத், ஆனி தாமஸ் திரிபாலினி மற்றும் சுவாதி ஆகியோர், நீலகிரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்திருந்தார்.

