/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் 600 இடைநின்ற குழந்தைகள் அதிர்ச்சி! மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
/
மாவட்டத்தில் 600 இடைநின்ற குழந்தைகள் அதிர்ச்சி! மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
மாவட்டத்தில் 600 இடைநின்ற குழந்தைகள் அதிர்ச்சி! மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
மாவட்டத்தில் 600 இடைநின்ற குழந்தைகள் அதிர்ச்சி! மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
ADDED : பிப் 05, 2024 09:33 PM

ஊட்டி:நீலகிரியில் உள்ள இரு கல்வி மாவட்டத்தில், 600 இடைநின்ற பள்ளி குழந்தைகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 'குன்னுார்; கூடலுார் கல்வி மாவட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகள்,' என, 450 க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு கல்வி மாவட்டத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த ஆய்வில், ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் இடை நின்று வருவது அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் மாவட்ட கலெக்டரின் நேரடி ஆய்விலும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 600 பள்ளி குழந்தைகள் இடை நின்றது தெரியவந்துள்ளது. இதில், கூடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும், 300 குழந்தைகள் இடைநின்றது தெரிய வந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர்.
கூடலுார், பந்தலுார் வட்டத்தில், 40 சதவீதம் பழங்குடியினர் குழந்தைகள் இடை நின்றதால் இந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பள்ளியில் சேர்க்க வழி என்ன?
சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், 'பள்ளி இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்க, அவர்கள் தங்கி படிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எந்த இடத்தில் பள்ளி இடைநின்ற குழந்தைகள் அதிகம் உள்ளார்களோ அந்த இடங்களை அடையாளம் கண்டு அங்கு உண்டு உறைவிட பள்ளி ஆரம்பிக்க வேண்டும். இதற்காக ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அரசு செலவிடப்படுவதால் அனைவருக்கும் கல்வி இயக்கம் இதற்கான நடவடிக்கைகளை திறம்படம் மேற்கொள்ள வேண்டும்,' என்பன, உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
கலெக்டர் அருணா கூறுகையில்,''நீலகிரியில், 600 இடைநின்ற பள்ளி குழந்தைகள் இருப்பதும், கூடலுார் கல்வி மாவட்டத்தில், 300 இடைநின்ற பள்ளி குழந்தைகள், இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது, இவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.