/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டம் முழுவதும் தைப்பூசம்; அமர்க்களம் பறவை காவடி ஊர்வலத்தில் பரவசம்
/
மாவட்டம் முழுவதும் தைப்பூசம்; அமர்க்களம் பறவை காவடி ஊர்வலத்தில் பரவசம்
மாவட்டம் முழுவதும் தைப்பூசம்; அமர்க்களம் பறவை காவடி ஊர்வலத்தில் பரவசம்
மாவட்டம் முழுவதும் தைப்பூசம்; அமர்க்களம் பறவை காவடி ஊர்வலத்தில் பரவசம்
ADDED : ஜன 26, 2024 12:41 AM

பந்தலுார்;நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.
பந்தலுார் அருகே, உப்பட்டி பஜாரில் அமைந்துள்ள செந்துார் முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த, 18ஆம் தேதி காலை முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், செந்துார் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம்; கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது.
நேற்று காலை, 6:00 மணி முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பொன்னானி ஆற்றங்கரையில் இருந்து பால் காவடி, பறவை காவடி, அலகு குத்துதல்,வேல் காவடி, பால்குடம், நீர் குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 3 கி.மீ., துாரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பறவை காவடி எடுத்து தொங்கியபடி வந்தனர். ஆண் மற்றும் பெண் பக்தர்கள், 12 அடி நீளம் உள்ள வேல் அலகு குத்தி நடந்து வந்ததும் பக்தர்களை பரவசப்படுத்தியது.
தொடர்ந்து, முருகனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை வானவேடிக்கை மற்றும் தேர் ஊர்வலம் நடந்ததுடன், இன்று காலை நீர் விட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில் வேல், செயலாளர் முருகேசன், பொருளாளர் மோகன்தாஸ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
ஊட்டி லோயர் பஜார் பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை முதல் ஐயனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ஐயன் கோவிலில் இருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. 11.00 மணிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் முருக பெருமானுக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவிலில், 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
எம்.பாலாடா முருகன் கோவில் உட்பட கிராமங்களில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகபெருமானுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, பஜனை பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
கோத்தகிரி காத்துகுளி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, திருகல்யாணத்துடன், அகண்ட பஜனை நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு காப்பு கட்டி, சரவண பொய்கை சென்று பக்தர்கள் காவடி எடுத்து, திருக்கோவிலை வந்தடைந்தனர். கரகாட்டம் நடந்தது. பகல், 1:00 மணிக்கு அன்னதான நிகழ்வை தொடர்ந்து, திருத்தேர் வீதி உலா நடந்தது.
இன்று காலை,11:00 மணிக்கு, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேதராய் முத்துக்குமாரசாமியுடன் திருத்தேர் பவனியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில், காலை, 7:30 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜை, 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, சாய்குமார் மற்றும் பகவத் சைதன்யா குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
பகல், 12:00 மணிக்கு, அன்னதானமும், 4:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:10 மணிக்கு, கொடி இறக்கி, 6:30 மணிக்கு, தீபாராதனை நடந்தது. வரும், 31ம் தேதி வரை, மவுன பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமையில், விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கோத்தகிரி அளக்கரை சாலையில் அமைந்துள்ள காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள திருமால் முருகன் திருக்கோவிலில் காலையில், சக்கத்தா மாரியம்மன் கோவிலில் இருந்து, வாத்தியம் முழங்க, பால் குடத்துடன், காவடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜை, தீபாராதனையுடன், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், கோத்தகிரி தேன் மலை, பிக்கமொரஹட்டி உட்பட, முருகன் கோவில் அமைந்துள்ள கிராமங்களில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குன்னுார் அட்டடி அருகே சரவணமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மகா கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
இதேபோல, வெலிங்டன் சுப்ரமணியர் சுவாமி கோவில், ஸ்டான்லி பார்க் பாலமுருகன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடந்தது.

