sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்

/

தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்

தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்

தலை கவசமில்லாத பயணம்: தடுமாறினால் மரணம்


ADDED : செப் 10, 2025 09:28 PM

Google News

ADDED : செப் 10, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--நிருபர் குழு-

இரு சக்கர வாகனங்களில், 'ஹெல்மெட்' அணிவதன் முக்கியத்துவம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அனைத்து பகுதிகளில், போலீசார் நின்று அபராதம் விதிப்பதும் அவ்வப்போது தொடர்கிறது. எனினும், போலீசார் இல்லாத குறுக்கு பாதைகளில் விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை மலை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கூடலுார், பந்தலுார் பகுதியில் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்கின்றனர். இளைஞர்கள், பெண்கள் பலரும் மூன்று பேரை வைத்து அதி வேகமாக பயணம் செய்வது தொடர்கிறது.

காலை, மாலை நேர விதிமீறல் காலை நேரங்களில் பள்ளி, கல்லுாரிக்கு குழந்தைகளை அனுப்ப செல்லும் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது குழந்தைகளுடன் மூன்று பேர் செல்வது அதிகரித்து வருகிறது. அதில், பெற்றோர் முதல் மாணவ, மாணவியர் வரை ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவதுடன், சாலை விபத்தும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, காலை நேர 'பீக் ஹவர்', மாலை நேர 'பீக் ஹவர்சில்' போக்குவரத்து போலீசார் கண்காணித்து அபராதம் விதித்தால் மட்டுமே ஓரளவு விதிமுறை மீறல்களை தடுக்க முடியும்.

கூடலுார் கூடலுார்- கேரளா சாலை மற்றும் உள்ளூர் மலை பகுதியாக உள்ளது. பல இடங்களில் சாலையின் அகலம் குறுகிய அளவில் உள்ளது. சாலை ஓரங்களில் மழைநீர் கால்வாய்கள் இன்றி வழிந்தோடும் மழை நீரால் சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதிலும், மக்கள் நடந்து செல்லவும் சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும், இங்குள்ள சாலைகளில் உள்ளூர் மற்றும் இன்றி கேரளா, கர்நாடகா வாகனங்களும் அதிகளவில் வருவதால், 'பிக்-ஹவர்' நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.

பல பெற்றோர்கள் குழந்தையை குறித்த நேரத்தில் அழைத்து செல்லவும், மழை காலத்தில் விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில் இருசக்கர வாகனத்தை அதிக வேகத்தில் இயக்குகின்றனர். இதனால், சாலையில் விழுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பந்தலுார் மாநில எல்லையான பந்தலுார் சுற்று வட்டார பகுதி சாலைகள் அனைத்தும் கிராம சாலைகளை உள்ளடக்கி உள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமல், ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். இத்தகைய சாலைகளில், சாகசம் காட்டுவது, அதிவேகத்தில் பைக்குகளில் செல்வது, ெஹல்மெட் அணியாமல் செல்வது தற்போது பெரியோர் முதல் இளையோர் வரை 'பேஷனாக' மாறிவிட்டது.

தோட்ட தொழிலாளர்கள் கடன் வாங்கி தங்கள் ஆண் வாரிசுகளுக்கு விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி கொடுப்பதும், அதில் பறப்பதை ரசிப்பதும் தொடர்கிறது. அதே நேரத்தில், அதனால் பாதிப்புகள் ஏற்படும்போது மன உளைச்சலுக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார் பகுதியில் பெரும்பாலான மக்கள் ெஹல்மெட் அணியாமல் இரு சக்கரவாகனத்தில் பயணிக்கின்றனர். போலீசார் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதனால் பயன் கிடைப்பதாக தெரியவில்லை.

சுற்றுலா பயணிகள் அத்துமீறல் குன்னுார் மலை பாதை வழியாக ஊட்டிக்கு இருசக்கர வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் வருகின்றனர். இதேபோல, குன்னூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் நவீன 'பறக்கும்' பைக்களில் அமர்ந்து போக்குவரத்து விதி மீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, கோத்தகிரி சாலை, பாரத் நகர் உட்பட சில இடங்களில் ரேஸ் ஓட்டுவதையும் இவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மலை பாதையில் அதிவேகமாக வாகனம் இயக்கியதால், மாவட்டம் முழுவதும் உள்ள, 5 போலீஸ் டிவிஷன்களில், இரு ஆண்டில், 18 பேர் விபத்து ஏற்பட்டு பலியாகி உள்ளனர். இதனை தவிர்க்க, மலை பாதைகளில் போதிய விழிப்புணர்வு; அபராதம் விதிப்பதை நாள்தோறும் போலீசார் தொடர வேண்டும்.

அதிவேகத்தை தவிர்க்க வேண்டும் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திகுமார் கூறியதாவது:

அதிவேகம், சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் செல்வது, தொலைதுாரங்களில் இருந்து துாக்கமில்லாமல் வாகனங்களை இயக்கி வருவது விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதில், இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு நல்ல எதிர்காலத்தை இழந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஓட்டுனர்கள், பயிற்சி பள்ளிகளில், சாலை விதிகள் குறித்தும், புதிய சட்டதிட்டங்கள், அபராதம், போக்குவரத்து குறியீடுகள் குறித்து, சாலை விழிப்புணர்வு வார விழா நாட்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீசாரும் பல பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இரு சக்கர, நான்கு சக்கர ஓட்டுனர்கள், வாகனத்தை இயக்கும் முன், டயரின் காற்று, எரிபொருள், 'பிரேக்' உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். முக்கியமாக மலை பகுதி கொண்டை ஊசி சாலைகளில் அதிவேகத்தை தவிர்க்க வேண்டும். சாலையில் விட்டு, விட்டு வரையப்பட்டுள்ள வெள்ளை கோட்டுப் பகுதியில், கவனமாக முந்த வேண்டும். பாலங்களில் முந்தவோ, தொடர்ச்சியாக வரையப்பட்டுள்ள மஞ்சள் கோடுகளை தாண்டவோ கூடாது.

மேலும், காலை, மாலை பள்ளி நேரங்களில் பெற்றோர் அவசர கதியில் பிள்ளைகளை ெஹல்மெட் அணியாமல் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இரு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெற்றோர் கவனமாக@ இருக்க வேண்டும்


தேவாலா பகுதி, முனைவர் சமுத்திரபாண்டியன்,''தற்போதைய காலகட்டத்தில் வாகனங்கள் வைத்திருப்பது அவசிய தேவையாக மாறி உள்ளது. ஆனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வருவதுடன், மூன்று அல்லது நான்கு பேர் ஒரே பைக் மற்றும் ஸ்கூட்டியில் பயணிப்பதால் விபத்து அதிகரித்து வருகிறது. ''படிக்கும் வயதில் பள்ளி மற்றும் கல்லுாரி செல்ல அரசு மற்றும் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், அதில் பயணிக்க பெற்றோர் தங்கள் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லாவிடில் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சி மொத்தமாக மறைந்துவிடும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்,'' என்றார்.



பெற்றோர் செயலால் பெரும் ஆபத்து


குன்னுார் சமூக ஆர்வலர் ஆல்தொரை கூறுகையில்,''இளம் தலைமுறையினருக்கு அதிக விலை கொடுத்து இரு சக்கர வாகனங்களை பெற்றோர் வாங்கி கொடுப்பதை பெருமையாக நினைக்கின்றனர். இதனை வைத்து அதிவேகத்தில் ஓட்டுவதும், ஹெல்மெட் இல்லாமல் செல்வதும் பாதகமாக முடிகிறது. விபத்து ஏற்பட்ட பிறகு வருத்தப்படுகின்றனர். தற்போது கிராம பகுதிகளிலும் இந்த நிலை ஏற்படுகிறது. போலீசார் சில குறிப்பிட்ட பாயிண்ட்களில் மட்டுமே நின்று அபராதம் விதிக்கின்றனர். இதனை அறிந்து வேறு வழியில் செல்பவர்கள் தப்பித்து கொள்கின்றனர்,'' என்றார்.



விபத்தின் ஊனம் குடும்பத்தை சிதைக்கும்


கூடலுார் 'ரெப்கோ' வங்கி இயக்குனர் ரகு கூறுகையில், ''இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், ெஹல்மெட் அணியாமல் செல்வதாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி செல்வது, சில நேரங்களில் பெரும் விபத்துகளை ஏற்படுத்துகிறது. காலை, மாலை நேரங்களில், ஆட்டோ, பைக்குகளில் அதிக குழந்தைகளை ஏற்றி செல்பவர்கள், போலீசாரை கண்டால், சாலையோரம் பைக்கை நிறுத்தி, அவர்கள் சென்ற பின் மீண்டும் பயணத்தை தொடர்கின்றனர். போலீசார், விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் ''மேலும், இருசக்கர வாகனம் விபத்தினால் ஏற்படும் ஊனங்கள், உயிரிழப்புகளால், குடும்பத்துக்கும், இளைஞர் களின் எதிர்காலத்துக்கும் பேரிழப்புகளை ஏற்படுத்துகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ெஹல்மெட் அணிந்து செல்வதுடன், கூடுதலாக பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விபத்துகளை தவிர்க்க காலதாமதம் ஆகி விட்டது என இருசக்கர வாகனங்களை, அதிக வேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.



உயிர் முக்கியம் என்பதை உணர வேண்டும்


பந்தலுார் முன்னாள் நகராட்சி தலைவர் அமிர்தலிங்கம், ''மனித உயிர் விலைமதிப்பு இல்லாதது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர், சாகசம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, தலைகவசம் அணியாமலும், மொபைல் போனில் பேசிய படியும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதும், அதிவேகத்தில் பயணிப்பதும் தொடர்கிறது. இதனால், தினசரி விபத்துக்களில் எதிர்கால தலைமுறைகளின் உயிரை இழந்து வருவது வேதனையளிப்பதாக உள்ளது. எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நமது உயிர் முக்கியம், நமது குடும்பம் முக்கியம் என்பதை உணர்ந்து பாதுகாப் பாகவும், மித வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us