/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புக்கு ஒரே நேரத்தில் வந்த இரு சிறுத்தைகள்; அச்சத்தில் கொல்லி மலை மக்கள்
/
குடியிருப்புக்கு ஒரே நேரத்தில் வந்த இரு சிறுத்தைகள்; அச்சத்தில் கொல்லி மலை மக்கள்
குடியிருப்புக்கு ஒரே நேரத்தில் வந்த இரு சிறுத்தைகள்; அச்சத்தில் கொல்லி மலை மக்கள்
குடியிருப்புக்கு ஒரே நேரத்தில் வந்த இரு சிறுத்தைகள்; அச்சத்தில் கொல்லி மலை மக்கள்
ADDED : மே 18, 2025 09:58 PM

குன்னுார்; குன்னுார் கொல்லிமலை கிராமத்திற்கு, ஒரே நேரத்தில் இரு சிறுத்தைகள் வந்த சம்பவம், மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவைத் தேடி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, கேத்தி பாலாடா அருகே கொல்லிமலை கிராமத்திற்கு இரு சிறுத்தைகள் ஒரே நேரத்தில் வந்துள்ளன.
அங்குள்ள விவசாயி ஈஸ்வரமூர்த்தி என்பவரின், வீட்டு வளர்ப்பு நாயை வேட்டையாட முயற்சி செய்தது. எனினும் கிடைக்காமல் அங்கிருந்து வெளியேறியது. சப்தம் கேட்ட குடும்பத்தினர், சிறுத்தை நடமாட்டம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கின்றனர்.
இந்த பகுதிக்கு வரும் சிறுத்தைகளை, கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோத்தகிரியில் மூன்று ஆடுகள் பலி
கோத்தகிரி அரவேனு சாலையில் அமைந்துள்ள ராபராய் எஸ்டேட் பகுதியில், தனியார் தோட்டத்தில், பிரவீன் என்ற விவசாயி, ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆடு ஒன்றை சிறுத்தை கவ்வி துாக்கி சென்றுள்ளது. சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து, சிறுத்தியை துரத்த முயன்றனர்.
இருப்பினும், ஆட்டை விடாமல் சிறுத்தை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் மறைந்தது. ஆட்டின் உரிமையாளர் பிரவீன் கூறுகையில், ''கடந்த பல நாட்களாக சிறுத்தை நடமாடி வருகிறது. இதனால், ஆடுகளை மேய்ச்சலுக்கு விடாமல், பட்டியில் அடைத்து வைத்திருந்தோம். இருப்பினும், பட்டிக்குள் புகுந்த சிறுத்தை இதுவரை, மூன்று ஆடுகளை கவ்விச் சென்று கொன்றுள்ளது. பாதிக்கப்பட்ட எனக்கு நிவாரணம் வழங்குவதுடன் சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,''என்றார்.