/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் எரிபொருளாக மாறும் களைச்செடிகள்
/
நீலகிரியில் எரிபொருளாக மாறும் களைச்செடிகள்
ADDED : ஜூன் 15, 2025 01:10 AM

கூடலுார்:மசினகுடியில் வனத்துறையினர் அமைத்துள்ள தொழிற்சாலையில், களைச்செடிகளை பயன்படுத்தி, 'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.
மாநிலத்தில் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் உத்தரவுப்படி, நீலகிரி மாவட்ட வனங்களில் காணப்படும், உண்ணி உள்ளிட்ட களைச்செடிகளை அகற்றும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிகளை ஏற்கனவே ஐகோர்ட் நீதிபதிகள் சதீஸ்குமார், பரத் சக்கரவர்த்தி ஆய்வு செய்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், வனங்களிலிருந்து அகற்றப்படும் உண்ணி செடிகள் உட்பட பிற களைச்செடிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, வருவாய் ஈட்டும் நடவடிக்கையில், முதுமலை மசினகுடி வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் அகற்றப்படும் களைச்செடிகளை சேகரித்து, சிறிய துகள்களாக மாற்றி, உலர்த்தி, இயந்திரத்தின் உதவியுடன், 'பிரிக்வெட்ஸ்' என்ற எரிபொருளை தயாரிக்கும் பணி, மசினகுடியில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சி தற்போது முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
வனத்துறையினர் கூறியதாவது:
வனப்பகுதிகளை பாதிக்கும் களை செடிகளை தொடர்ச்சியாக அகற்றி வருகிறோம். இதை ஆங்காங்கே குவித்து வைப்பதால், கோடையில் வனத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்க்க, களை செடிகளால், பிரிக்வெட்ஸ் எரிபொருள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை துவங்கப்பட்டு, உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெற்றதால், அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

