/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் போராட முடிவு
/
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் போராட முடிவு
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் போராட முடிவு
காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் போராட முடிவு
ADDED : மே 27, 2025 12:40 AM

ராமநாதபுரம்: -தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் பயனடையும் வகையில் காவிரி,வைகை,குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் போராட்டம் நடத்த காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடியில் 2021 பிப்.,19ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி பணிகளை துவக்கி வைத்தார். இதற்காக ரூ.6941 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திட்டத்தின் பயன்கள்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் 6300 மில்லியன் கன அடி நீரை ஆக்கபூர்வமாக தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதால் கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தாலுகாக்கள். திருச்சி மாவட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகாக்கள் பயனடையும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம், குளத்துார், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் தாலுகாக்கள், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்துார், சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை தாலுகாக்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்துார், ராமநாதபுரம் தாலுகாக்கள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி தாலுகாக்கள், துாத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா பகுதிகள் பயனடையும்.
மூன்று பிரிவுகளாக பணிகள்
கரூர் மாவட்டம் மாயனுார் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாயும் வெள்ளாறு வரை 118.5 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
வெள்ளாற்றுடன் இணைப்பது முதல்நிலை. இரண்டாவது நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கி.மீ., கால்வாய் அமைத்து சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் இணைப்பதாகும்.
இதன் மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
மூன்றாம் நிலையில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 34 கி.மீ., கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால்நதி, மற்றும் குண்டாற்றுடன்இணைக்கப்பட்டு 492 ஏரிகளும் 44 ஆயிரத்து 547 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தரப்பில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து மூன்று பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் பணிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு முற்றிலுமாக இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அர்ஜூனன் கூறுகையில், காவிரி வெள்ளக் கால்வாய் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.
அறந்தாங்கி பகுதியில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநாடு திருச்சியில் ஜூன் 3 ம் தேதி நடக்கவுள்ளது. அந்த மாநாட்டில் போராட்டத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்றார்.