/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து குறைவால் மல்லிகைவிலை உயர்வு : கிலோ ரூ.800
/
வரத்து குறைவால் மல்லிகைவிலை உயர்வு : கிலோ ரூ.800
ADDED : ஜூன் 07, 2025 01:37 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், மண்டபத்தில் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.
ராமேஸ்வரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தங்கச்சி மடம், மண்டபம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை நாற்றுக்கள் உற்பத்தி நடக்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.
சீசன் காலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2500க்கு விற்கப்படுகிறது.மார்ச்சில் சீசன் துவங்கிய நிலையில் மண்டபம், தங்கச்சிமடம் பகுதியிலிருந்து மல்லிகை வரத்து அதிகரித்தது.
மதுரை, திண்டுக்கல் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து பூ வந்ததால் கடந்த மாதம் கிலோ ரூ.400 முதல் ரூ.500க்கு விற்றது. இந்நிலையில் தற்போது கோயில்களில் வைகாசி மாத வசந்த உற்ஸவ விழா மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்த நிலையில் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் வியாபாரிகள் கூறுகையில்' மல்லிகை பூவுக்கு மார்ச் முதல் மே வரை சீசன் ஆகும். சில நாட்களாக வரத்து குறைந்துள்ளதால் கடந்த மாதத்தை விட விலை உயர்ந்து கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளது' என்றனர்.