/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் நிறுத்தம்
/
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் நிறுத்தம்
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் நிறுத்தம்
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் நிறுத்தம்
ADDED : ஜூன் 05, 2025 02:15 AM
ராமநாதபுரம்:தமிழக அரசு ஒப்புதல் வழங்காததால் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
நுாறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய கேந்திரமாகவும், இந்தியாவின் தென் கடலோர வணிக மையமாகவும் விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964 டிச.,23 ல் தனுஷ்கோடியை தாக்கிய புயல், பேரலைகளால் நகரம் உருக்குலைந்தது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வந்த ரயில், ரயில் பாதை தண்ணீரோடு அடித்துச்செல்லப்பட்டது. சில ஆண்டுகளுக்குப்பின் ராமேஸ்வரம் வரை ரயில்கள் இயக்கப்பட்டன.
50 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி வரை 17 கி.மீ.,க்கு ரூ.208 கோடியில் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது. 2019 மார்ச்சில் பிரதமர் மோடி காணொலி மூலம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் பின்பு சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் ஆய்வு செய்து 6 முதல் 7 மீட்டர் உயரத்தில் பாதை அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என பரிந்துரை செய்தனர். 10 க்கும் மேற்பட்ட இடங்களில் 18 மீட்டர் ஆழத்தில் மண் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அதன் பின் வழக்கம்போல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திட்டத்திற்கு எதிராக கிளம்பினர். இந்தப்பகுதியானது மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்திற்குள் வருவதால் சுற்றுச்சூழலுக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இடையூறாக இருக்கும், கோதண்டராமர் கோயில் பகுதியில் உள்ள உப்பங்கழியில் ஆண்டு தோறும் டிச., முதல் பிப்., வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வலசை வரும் பிளமிங்கோ பறவைகள் வரத்து பாதிக்கப்படும், சதுப்பு நிலத்தில் 6 மீட்டர் உயரத்தில் ரயில் பாதை அமைக்கும் போது நிலம் கடினத்தன்மையாகிவிடும். பல்லுயிர் பெருக்கத்திற்கு இடையூறாக அமையும் என அடுத்தடுத்து பல பிரச்னைகளை எழுப்பினர்.
இதையடுத்து புதிய ரயில் பாதை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.5 கோடியை ரயில்வே திருப்பி அனுப்பியுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு புதிய ரயில்பாதை அமைந்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை துவக்கலாம். தனுஷ்கோடி மீண்டும் வளம் மிகுந்த நகரமாக மாற ரயில்பாதை திட்டத்தை தொடர வேண்டும் என்பதே ராமேஸ்வரம் பகுதி மக்கள் விருப்பமாக உள்ளது. -------------