/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்ணய விலை குறைவு
/
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்ணய விலை குறைவு
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்ணய விலை குறைவு
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நிர்ணய விலை குறைவு
ADDED : ஜன 26, 2024 05:17 AM
திருவாடானை: நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தனியாரிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும் விவசாயிகளுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. இயந்திரம் மூலம் இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூடைகளை விவசாயிகள் தமிழக அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பெறுவது வழக்கம்.
இதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதும் வழக்கம். இந்த ஆண்டு இத்தாலுகாவில் சிறுகம்பையூர், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை, அஞ்சுகோட்டை, திருவாடானை, என்.எம்.மங்கலம் ஆகிய ஏழு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
சன்ன ரகம் கிலோ ரூ.23.10க்கும், பொது ரகம் ரூ.22.65க்கும் அரசால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தனியார் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு வாங்குவதால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாது: நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரகம் கிலோ ரூ.23.10க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தனியார் வியாபாரிகள் கிலோ ரூ.30க்கு வாங்குகின்றனர். உதாரணத்திற்கு 60 கிலோ எடையுள்ள மூடையை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் போது 400 முதல் 450 ரூபாய் வரை கூடுதல் லாபம் கிடைக்கிறது.
இதனால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்விதில்லை. மேலும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூடைகளை வாகனங்களில் ஏற்றிச்சென்று இறக்குவதற்கும் அதிகம் செலவாகிறது.
அதே நேரம் வியாபாரிகள் வீட்டிற்கே வந்து நெல் மூடைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு பல்வேறு வழிகளில் லாபம் கிடைப்பதால் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம் என்றனர்.

