/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாட்டுப்பொங்கலை கொண்டாடிய விவசாயிகள்
/
மாட்டுப்பொங்கலை கொண்டாடிய விவசாயிகள்
ADDED : ஜன 17, 2024 10:43 AM
சேலம்,: தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாள், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப்பொங்கல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் நேற்று அதிகாலை முதலே, கால்நடைகளான பசு, காளை மாடு, ஆடு உள்ளிட்டவற்றை குளிப்பாட்டி சுத்தம் செய்து, மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டினர். மாடுகளுக்கு சலங்கைகளுடன் கூடிய புது கயிறுகளை கட்டி, கலர் காகிதங்கள், ரிப்பன் உள்ளிட்டவற்றை கட்டி அலங்காரம் செய்தனர். கரும்புகளில் பந்தல் அமைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து உறவுகளுடன், 'பொங்கலோ பொங்கல்' என உற்சாகத்துடன் வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து வாழை இலையில் படையல் இட்டு வழிபட்ட பின் மாடுகளுக்கு வாழை பழம், பொங்கல் வழங்கி வணங்கினர். பலரும், முன்னோருக்கும் வழிபாடு நடத்தினர்.
குறிப்பாக சேலத்தை சுற்றியுள்ள கன்னங்குறிச்சி, கொண்டப்பநாயக்கன்பட்டி, ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி, சிவதாபுரம், மாமாங்கம், பனமரத்துப்பட்டி, குள்ளப்பநாயக்கனுார், குரால்நத்தம், தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி, சாமகுட்டப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, அரியானுார், வீரபாண்டி, பைரோஜி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுப்பொங்கலை விவசாயிகள் கோலாகலமாக கொண்டாடினர்.
வழுக்கு மரம் ஏறுதல்
ஏற்காடு, ஜெரீனாக்காட்டை சேர்ந்த, ஆர்.டி.எஸ்., கிளப் சார்பில், அதன் மைதானத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதில் மர உச்சியில் சில்வர் குடத்தில், 5,000 ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. இதில் சுற்றுவட்டார இளைஞர்கள் பலர் ஏறினர். மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய போட்டி, இரவு, 7:00 மணி வரை நீடித்தும் யாரும் பரிசைத்தொட முடியவில்லை.
எருதாட்டம்
இடைப்பாடியில் உள்ள கவுண்டம்பட்டியில் எருதாட்டம் நேற்று நடந்தது. இதில் வெளியூர், உள்ளூரில் இருந்து கொண்டு வரப்பட்ட, 11 காளைகளை, சின்னமாரியம்மன் கோவிலை சுற்றிவந்து எருதாட்டம் நடத்தினர். ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இளைஞர் படுகாயம்
மேச்சேரி, அரங்கனுார் அடுத்த செம்மானுாரில் எருதாட்டம் நடந்தது. அதில் பொம்மியம்பட்டி காலனியை சேர்ந்த கருணாகரன், 32, அவரது நண்பர்கள், காளை மாடுகளை கயிறு கட்டி இழுத்து வந்தனர். அப்போது ஒரு காளை, கருணாகரன் இடது காலில் மிதித்தது. இதில் இடது கால் முறிந்ததால் கிராம மக்கள், ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
இன்று குதிரை ரேக்ளா
ஆத்துாரில், 49ம் ஆண்டாக ஆத்துார் நகர பொங்கல் விழா கழகம், 35ம் ஆண்டாக, உடையார்பாளையம் நண்பர் குழு, பொங்கல் விழா குழு ஆகியவை, கடந்த, 15 முதல், இன்று வரை, பொங்கல் விழா நடத்துகின்றனர். நேற்று முன்தினம் பறை இசை, பறையும் பரதமும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நேற்று இன்னிசை பட்டி மன்றம் நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு ரங்கோலி போட்டி, மாலை, 4:00 மணிக்கு பெண்களுக்கு ஓட்டம், பானை உடைத்தல், உருளைக்கிழங்கு சேர்க்கும் ஓட்டம், தொடர் ஓட்டப்போட்டி நடக்கின்றன. 6:00 மணிக்கு நர்த்தகி நடராஜ் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல் உடையார்பாளையம் நண்பர் குழுவினர், இன்று காலை, 10:00 மணிக்கு, 35ம் ஆண்டாக, குதிரை ரேக்ளா போட்டி நடத்துகின்றனர்.
மாட்டு வண்டி ஓட்டிய எம்.எல்.ஏ.,
தாரமங்கலம் அருகே அமரகுந்தியில், ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி உள்ளிட்ட கட்சியினர், பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் ஜல்லிக்கட்டு, நாட்டு மாடு என, 50க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தன. மாடுகளை வணங்கிய, எம்.எல்.ஏ., தொடர்ந்து மாட்டு வண்டியில் சவாரி செய்தார். அப்பகுதியில் இருந்து அவர் வீடு வரை, 3 கி.மீ., ஓட்டிச்சென்றார்.
மாவட்ட உழவர் சந்தைகளில்
ரூ.1.36 கோடிக்கு விற்பனை
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஊரக பகுதிகளில் ஆத்துார், இளம்பிள்ளை, இடைப்பாடி, ஜலகண்டாபுரம், மேட்டூர், ஆட்டையாம்பட்டி, தம்மம்பட்டி ஆகிய இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. அங்கு மாட்டுப்பொங்கலையொட்டி பூஜைக்கு தேவையான பொருட்கள், காய்கறி, பழங்கள் வாங்க, நேற்று வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இவற்றில் ஒரே நாளில், 1.36 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
பஸ் ஸ்டாண்ட் 'வெறிச்'
பொங்கல் பண்டிகையால் சில நாட்களாக, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பயணியர் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டது. குறிப்பாக கடந்த வெள்ளி, சனி, ஞாயிறில் கூட்டம் அலைமோதியது. இதற்கு முற்றிலும் மாறாக நேற்று, புது பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. பஸ்களில் ஒன்றிரண்டு பயணியர் மட்டும் பயணித்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓமலுார், திருச்சி, சாரதா கல்லுாரி சாலைகள், வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடின.

