/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு டிரைவர்களிடம் நெருக்கடி: போலீஸ் எச்சரிக்கையால் கலைந்த தொழிற்சங்கத்தினர்
/
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு டிரைவர்களிடம் நெருக்கடி: போலீஸ் எச்சரிக்கையால் கலைந்த தொழிற்சங்கத்தினர்
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு டிரைவர்களிடம் நெருக்கடி: போலீஸ் எச்சரிக்கையால் கலைந்த தொழிற்சங்கத்தினர்
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு டிரைவர்களிடம் நெருக்கடி: போலீஸ் எச்சரிக்கையால் கலைந்த தொழிற்சங்கத்தினர்
ADDED : ஜன 10, 2024 10:42 AM
சேலம்: போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு டிரைவர், கண்டக்டர்களுக்கு நெருக்கடி கொடுத்த தொழிற்சங்கத்தினர், போலீஸ் எச்சரிக்கையால் கலைந்து சென்றனர்.
அரசு போக்குவரத்துக்கழகத்தை சேர்ந்த, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினாலும், சேலத்தில் அனைத்து தடங்களில் அரசு பஸ்கள் இயங்கின. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்களும் வழக்கம்போல் ஓடின.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வரும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து தடத்துக்கும் வெளியூர் பஸ்கள் வழக்கம்போல் புறப்பட்டன. அசம்பாவிதத்தை தவிர்க்க, சேலத்தில் உள்ள, 6 பணிமனைகள் உள்பட புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் சேலம் கோட்டத்தில் உள்ள, 32 பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ் இயக்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை. காலை, 8:00 மணிக்கு பஸ் ஸ்டாண்டுகளில் பயணியர் கூட்டம் குறைவாக இருந்தாலும் நேரம் போகப்போக, பயணியர் வருகை கணிசமாக அதிகரித்து வந்தது.
முன்னதாக காலை, 7:15 மணிக்கு, அ.தொ.பே., சேலம் மண்டல செயலர் சென்னகிருஷ்ணன் தலைமையில் தொழிற்சங்கத்தினர், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மெய்யனுார் பணிமனை முன் திரண்டு பஸ்களை வெளியே வரவிடாமல் தடுக்க முயன்று, போராட்டத்துக்கு தயாராகினர். ஆனால் போலீசார் பேச்சு நடத்தி அறிவுரை வழங்கியதால் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, 11:15 மணிக்கு சென்னகிருஷ்ணன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர் பழைய பஸ் ஸ்டாண்டில் திரண்டனர். அங்கு பணியில் இருந்த டிரைவர், கண்டக்டர்களிடம், 'பணியில் ஈடுபடாதே, நியாய போராட்டத்துக்கு ஆதரவு கொடு' என கேட்டு நெருக்கடி கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் போலீசார் எச்சரிக்க, அனைவரும் கலைந்து சென்றனர்.
குறைந்தபட்ச கோரிக்கையாவது
நிறைவேற்ற வலியுறுத்தல்
அ.தொ.பே., சேலம் மண்டல செயலர் சென்னகிருஷ்ணன் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான சம்பள உயர்வு பேச்சை, அரசு உடனே தொடங்க வேண்டும். இல்லையெனில் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், இடைக்கால நிவாரணமாக வழங்கியது போல், 4,500 ரூபாயாக்கு குறையாமல் வழங்க வேண்டும். ஆளெடுக்காததால் தொடர் பணி பெயரில் ஒவ்வொரு தொழிலாளியும், 3 முதல், 4 நாட்கள் வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில், 50 சதவீத பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை. ஆனால் அவர்களை மிரட்டி பணிய வைத்து, 100 சதவீத பஸ்சை இயக்குகின்றனர். இந்த வேலைப்பளுவால் மாதத்துக்கு, 10 தொழிலாளர்கள், சேலம் மண்டலத்தில் மாரடைப்பால் இறக்கின்றனர். தற்காலிக பணியாளர்கள் பெயரில், வேன், பள்ளிக்கூடம், டிரைவர் பயிற்சி பள்ளியை சேர்ந்த டிரைவர்களை அழைத்து வந்து பஸ்களை இயக்குவதால் பயணியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களை மனிதனாக மதித்து எங்களின் குறைந்தபட்ச கோரிக்கையையாவது நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது தொழிலாளர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என கூறிய முதல்வர், தற்போது தொழிலாளர்களின் பிரச்னைக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

