sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : ஜன 03, 2024 11:16 AM

Google News

ADDED : ஜன 03, 2024 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூட்டிய வீட்டில்

பணம் திருட்டு

வீட்டில் இருந்த பணத்தை காணவில்லை என, போலீசில் பெண் புகார் அளித்துள்ளார்.

ஓமலுார், காமராஜர் நகரில் குடியிருந்து வருபவர் அருண், 26. இவரது மனைவி செல்வி, 24. இவர்கள், தலைமுடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், செல்வி தன் வீட்டை பூட்டிவிட்டு, நேரு நகரில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீடு திறந்த நிலையில், பீரோவில் இருந்த, ஒரு லட்சத்து, 20 ரூபாய் காணவில்லை. நேற்று மாலை, ஓமலுார் போலீசில் புகாரளித்துள்ளார்.

இடைப்பாடியில் இன்று மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்

இடைப்பாடியில், இன்று மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது.

மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

இடைப்பாடி மின்சார அலுவலக கோட்டத்தில், மாதந்தோறும் முதல் புதன்கிழமையன்று மின் நுகர்வோர்களின் மாதாந்திர குறை தீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று இடைப்பாடி, சித்துார், கோனேரிப்பட்டி, ஜலகண்டாபுரம், கொங்கணாபுரம், கன்னந்தேரி ஆகிய பகுதிகளில் மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற்ற மின்நுகர்வோர், இடைப்பாடி கோட்ட அலுவலகத்தில் நடைபெறும், குறை தீர் கூட்டத்தில் பங்கேற்று, மின் வினியோகம் சம்மந்தமான குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

தந்தை கண்டித்ததால்மகன் மாயம்

தாரமங்கலம், பெரிய காடம்பட்டி நங்கீராம்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா, 35. இவரது மகன் தாரமங்கலத்தில் அரசு சுயநிதி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பைக்கில் வேகமாக சென்றதை இவரின் தந்தை கண்டித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்த மகனை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், தாய் சங்கீதா புகார்படி, போலீசார் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

அதிகளவில் அசைவம்

சாப்பிட்டவர் பலி

சேலத்தில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில், அதிகளவில் அசைவ உணவு, கேக் சாப்பிட்ட வாலிபர் இறந்தார்.

சேலம், தாதகாப்பட்டி புரு ேஷாத்தமன் மகன் நந்தகுமார், 23. இவர் விபத்தில் சிக்கியதால், வயிற்று பகுதியில் ஆப்ரேஷன் செய்யப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் ஆட்டுக்கறி, பிராய்லர் கோழிக்கறி சமைத்துள்ளனர். அதை அதிகளவில் சாப்பிட்டுள்ளார். அத்துடன் கேக்கும் சாப்பிட்டுள்ளார். இரவு, 9:00 மணிக்கு படுக்கை அறைக்கு சென்ற அவர், அங்கு மீதமிருந்த கேக்கை படுத்துக் கொண்டே சாப்பிட்டவர் துாங்கி உள்ளார்.

நள்ளிரவு, 12:30 மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரும் 5 முதல் பருத்தி ஏலம்

வியாபாரிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம் உள்பட சுற்றுப்புற விவசாயிகளின் நலன் கருதி, ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி மாரியம்மன் கோவில் திடலில், வாரந்தோறும் வெள்ளியன்று புது பருத்தி, ஏலத்தின் மூலம் விற்பனை நடக்கிறது.

நடப்பாண்டில் பருத்தி ஏலம் வரும், 5ல் தொடங்கி நடத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று, நல்ல விலைகொடுத்து கொள்முதல் செய்து கொள்ளலாம். உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் பள்ளப்பட்டியில் உள்ள, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ஏல விற்பனை நடக்கிறது.

அத்துடன், பள்ளப்பட்டி தலைமை சங்கத்தில் தினசரி நிலக்கடலை, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஆகியன ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, விவசாயிகள் குறிப்பிட்ட நாளில் நடைபெறும் ஏலத்திற்கு சாகுபடி செய்துள்ள பருத்தி, நிலக்கடலை, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

இத்தகவலை சங்க துணைப்பதிவாளர் ஸ்டீபன் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, 0427 - 2350119, 93620 - 33517, 95007 - 73062 என்ற எண்களில் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு இல்லாத கிணறால் ஆபத்து

சங்ககிரி பேரூராட்சி, இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட பால்வாய் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே, 80 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. கோடை காலத்திலும் இந்த கிணறு வற்றுவதில்லை. கிணற்றை ஒட்டி, 10 வீடுகள் உள்ளன. கிணற்றை ஒட்டியுள்ள பாதை வழியாக, பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.

கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்கவில்லை. இரவில் வெளிச்சம் தரும் வகையில் தெரு விளக்கும் அமைக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே, அனைவரையும் பாதுகாக்கும் வகையில், கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை கிடங்கை சுற்றும்

நாய்களால் தொல்லை

பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், காந்தி நகர் மயானத்தின் ஒரு பகுதியில், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் குப்பை கொட்டி வைத்துள்ளது.

அங்கிருந்து, காற்று மூலம் பிளாஸ்டிக் கழிவு நத்தமேடு சாலை, குறும்பர் தெரு சாலை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் சிதறி கிடக்கிறது. குப்பையை தோண்டி உணவு தேடுவதற்கு ஏராளமான நாய்கள் முகாமிடுகின்றன. அவை, நத்தமேடு சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை, கடிக்க பாய்கின்றன.

நாய்கள் சண்டையிட்டபடி சாலையின் குறுக்கே ஓடி, இரு சக்கர வாகன ஓட்டிகளை கீழே தள்ளி விடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த ,டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனித்துவ அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு

சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, தனித்துவ அட்டை பெறாத பயனாளிகள் மாநில அரசின் அடையாள அட்டை, ஆதார், மார்பளவு புகைப்படத்துடன், தங்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள இ.சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரம் பெற, கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.11ல் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை நேரில் அணுகலாம். தவிர, 0427 - 2415242, 94999 - 33489 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

குடிநீர் கேட்டு பெருமாம்பட்டி

மக்கள் பி.டி.ஓ.,விடம் மனு

வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட, பெருமாம்பட்டி ஊராட்சி சித்தர்கோவில் அருகே சத்யா நகர் உள்ளது. இங்கு, 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை, புதிய குடிநீர் இணைப்பு கொடுத்து மேட்டூர் குடிநீர் வழங்க வேண்டும் என, வீரபாண்டி ஒன்றிய பி.டி.ஓ., (கி.ஊ.) மலர்விழியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

இப்பகுதியில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து அருகிலுள்ள முருங்கப்பட்டி, ஆரியகவுண்டம்பட்டி, மூடுதுறை ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், புதிதாக குழாய் இணைப்புகள் கொடுக்கும்போது, சத்யா நகர் பகுதி இணைப்புகளுக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் குடிநீர் இன்றி அவதிப்படுகிறோம். எங்கள் பகுதிக்கு மேட்டூர் இணைப்பு கொடுத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பறவைகள் வாழ்விடம் குறித்து

ஆத்துார் வனத்துறையினர் ஆய்வு

ஆத்துாரில், நீர் நிலைகளில் பறவைகள் வாழ்விடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆத்துார் அருகே முட்டல், தென்னங்குடிபாளையம், அய்யனார்கோவில் ஏரி, கல்லாநத்தம், மணிவிழுந்தான், தலைவாசல், வீரகனுார், தெடாவூர், நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு உள்ளூர், வெளிநாட்டை சேர்ந்த நீர் வாழ் மற்றும் நில வாழ் பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்துள்ளன. வரும் 27, 28ல், நில, நீர் பறவைகள், உயிரினங்கள் குறித்து வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

பறவைகள் அதிகளவில் உள்ள ஏரி, ஆறு, வனப்பகுதிகளில் வாழ்விடம் குறித்து, ஆத்துார் கோட்ட வனத்துறை அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'பறவைகள், உயிரினங்கள் கணக்கெடுப்புக்கு முன்னதாக, அதன் வாழ்விடம், வழிப்பாதை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தவிர, வேட்டை கும்பலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.' என்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

சேலம் அருகே, கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.

சேலம், வீராணம் அருகே வலசையூர் எரிமேல்காட்டை சேர்ந்தவர் பசுபதி, 82. இவர், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, ஏரி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள கிணற்றின் அருகே புல் பிடுங்கி உள்ளார். அப்போது கால் இடறி, கிணற்றில் விழுந்ததில், தண்ணீர் மூழ்கி பலியானார். வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி

திறப்பு; பாட புத்தகங்கள் வினியோகம்

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று, மூன்றாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

சேலம், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 400க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று, தலைமையாசிரியை யோகேஸ்வரி அரசின் விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார்.

இதே போல், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், 400 மாணவர்களுக்கு பாட புத்தகங்களை தலைமையாசிரியர் இளங்கோவன் வழங்கினார். ஆட்டையாம்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 150 மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்களை தலைமையாசிரியர் விஜயராகவன் வழங்கினார்.

மாவட்டத்தில் ஒன்பது இடங்களில்

இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட, 13வது முகாம் இன்று, (ஜன.,3) ஒன்பது இடங்களில் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிற்பகல், 3:00 மணி வரை நடக்கும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு, இ.சேவை மையத்தை விட, 50 சதவீத கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும். மனுக்கள் மீது, 30 நாளில் தீர்வு காணப்படும். மொத்தம், 13 அரசு துறைகளின் சேவையை, முகாமில் ஒருசேர பெறலாம்.

சூரமங்கலம், 27 வது வார்டுக்கு, மாநகராட்சி கட்டடம் ராஜேந்திர சத்திரம், அம்மாபேட்டை 41வது வார்டு, முத்துமகால், அஸ்தம்பட்டி 31வது வார்டு, கோட்டை சமுதாய கூடம், கொண்டலாம்பட்டி, 57 வது வார்டு, கருங்கல்பட்டி இட்டேரி சாலையில் உள்ள எஸ்.எஸ்.மண்டபம்.

தாரமங்கலம் நகராட்சி, 19,20,21,27வது வார்டு, செங்குந்தர் திருமண மண்டபம், இடங்கணசாலை வார்டு, 3 - 7 வரை சித்தர் கோவில் திருமண மண்டபம், வீரக்கல்புதுார் பேரூராட்சி, ராமன் நகர் சமுதாய கூடம், ஏத்தாப்பூர் பேரூராட்சி, சமுதாய கூடம், சேலத்தாம்பட்டி ஊராட்சி, ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் என, மொத்தம் ஒன்பது இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us