ADDED : ஜூன் 10, 2024 01:59 AM
தேர்தல் விதி விலக்கப்பட்டதால்
இன்று மக்கள் குறைதீர் கூட்டம்
சேலம்: லோக்சபா தேர்தலையொட்டி சேலம் மாவட்டத்தில் கடந்த மார்ச், 16ல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மக்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மாறாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனுக்களை போட்டு செல்வதற்கு பெட்டி வைக்கப்பட்டது. அதில் மனுக்களை மக்கள் போட்டு வந்தனர்.
இந்நிலையில் தேர்தல் முடிவு கடந்த, 4ல் அறிவிக்கப்பட்டது. 6ல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால் வழக்கமான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளலாம் என்பதால், இரண்டரை மாதங்களுக்கு பின், இன்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. இதில், குறைகளை மனுவாக, மக்கள் கலெக்டரிடம் வழங்கலாம்.
கார்மெண்ட்ஸில் காதல்
போலீசில் ஜோடி தஞ்சம்
ஓமலுார்-
ஓமலுார், மேல் காமாண்டப்பட்டியை சேர்ந்தவர் விஜய், 26. கிருஷ்ணகிரி, ராஜவீதியை சேர்ந்தவர் சயிதா ஆயிஷா, 22. இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள கார்மெண்ட்ஸில் பணிபுரிந்தபோது காதலித்தனர். நேற்று வீட்டை விட்டு வெளியேறி, தொளசம்பட்டி அருகே முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, தொளசம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது வீட்டுக்கு தகவல் அளித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா பயணியர்
எண்ணிக்கை சரிவு
மேட்டூர், ஜூன் 10-
இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் மேட்டூர் அணை பூங்காவுக்கு, சுற்றுலா பயணியர் எண்ணிக்கை நேற்று பாதியாக சரிந்தது. 5,128 பேர் பூங்காவையும், 611 பேர், அணையையும் பார்வையிட்டனர். இதன்மூலம் நீர்வள ஆதார துறைக்கு, 28,695 ரூபாய், நுழைவு கட்டணமாக கிடைத்தது. கடந்த வாரம், 10,773 பேர் அணை, பூங்காவை பார்வையிட்டனர். அதற்கு முந்தைய வாரம், 11,797 பேர் பார்வையிட்டனர்.
மீனவரிடம் வழிப்பறி
ரவுடிக்கு 'காப்பு'
மேட்டூர்: மேட்டூர் அணை முனியப்பன் கோவில் அருகே வசிக்கும் மீனவர் சுரேஷ்குமார், 34. நேற்று மதியம் மாதையன்குட்டை அடுத்த எலிகரடு அரசு மதுக்கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியில் நின்றிருந்த, மாதையன்குட்டை, போன்கரட்டை சேர்ந்த ரவுடி முரளிதரன், 43, சுரேஷ்குமாரை மிரட்டி அவரிடம் இருந்த, 400 ரூபாயை பிடுங்கிக்கொண்டார். இதுகுறித்து சுரேஷ்குமார் புகார்படி நேற்று முரளிதரனை, மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.
எரியாத மின் விளக்கு
விபத்துக்கு வழிவகுப்பு
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி பஸ் ஸ்டாப் அருகே உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அது பழுதாகி ஒரு மாதமாக எரியவில்லை. அங்கு, 4 ரோடு சந்திப்பு, சர்வீஸ் சாலை உள்ளதால், எந்த நேரமும் வாகனங்கள் சென்றபடி உள்ளன. விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
திருட்டு சம்பவங்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், உயர் கோபுர மின் விளக்கை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.