ADDED : பிப் 24, 2024 03:39 AM
ஆதார் சிறப்பு முகாம்
பள்ளிகளில் தொடக்கம்
சேலம்: பள்ளி மாணவ, மாணவியர், ஆதார் பதிவு, புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதை தவிர்க்க அவரவர் பள்ளிகளில் பதிவை மேற்கொள்ள, 'எல்காட்' அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம், முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இத்திட்ட தொடக்க விழா, சேலம் குகை அரசு நகரவை மகளிர் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, முதன்மை கல்வி அலுவலர் கபீர், முகாமை தொடங்கி வைத்தனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 5,87,250 மாணவர்களில், இன்னும், 20,146 பேர் ஆதார் எடுக்காமல் உள்ளனர். இவர்களுக்கும், ஆதார் புதுப்பிக்கும் மாணவர்களுக்கும், அவரவர் பள்ளியில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாடியில் இருந்து விழுந்தவர் 'சீரியஸ்'நிறுவன பொறியாளர்கள் மீது வழக்கு
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 19. அஸ்தம்பட்டி, சங்கர் நகரில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனத்தில், எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். அவர் நேற்று முன்தினம், நிறுவனத்தின், 2வது மாடியில், 'ஏசி'யை மாட்ட, துளையிட்டுக்கொண்டிருந்தார். அப்போது கால் இடறி தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததாக, நிறுவன பொறியாளர்கள் பிரசன்னா, 32, ஜெயக்குமார், 35, மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.