/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புரட்டாசி 2வது சனி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
/
புரட்டாசி 2வது சனி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2வது சனி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 2வது சனி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : செப் 28, 2025 02:14 AM
சேலம்:புரட்டாசி, 2வது சனியை ஒட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று, மூலவர் அழகிரிநாதர், சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் நாச்சியார், சிங்கமுக ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு திருமஞ்சனம் செய்து, தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதருக்கு, ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் காட்சியளித்தனர்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.அதேபோல் செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், நாமமலை ஸ்ரீனிவாச பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
அதேபோல் தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு, 1,008 எலுமிச்சை பழம், வடை மாலையால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இடைப்பாடி, வெள்ளக்கரட்டு திம்மராய பெருமாள் கோவிலில் காணியாச்சிக்காரர்களான நாவிதர் சமூகத்தை சேர்ந்தவர்கள், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வீரப்பம்பாளையம், வெள்ளாண்டிவலசு, கேட்டுக்கடை பகுதிகள் வழியே ஊர்வலமாக கொண்டு சென்று, மீண்டும் கோவிலை அடைந்தனர். இடைப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் திருக்கோடி தீபம் ஏற்றி பூஜை நடந்தது. தொடர்ந்து நரசிம்ம பெருமாள் உற்சவர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சயன கோலத்தில் காட்சியளித்தார். அங்குள்ள ஆஞ்சநேயர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல் மாவட்டம் முழுதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
வாழப்பாடி, ஆலடிப்பட்டி ஊராட்சி பெலாப்பாடி அருகே உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், திருக்கோடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தைகளை கொண்டு வந்து எடைக்கு எடை சில்லரை காசுகளை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.

