sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தை பிறந்தால் வழி பிறக்கும்: பொங்கல் பண்டிகையை நினைவு கூர்கிறார் தமிழிசை

/

தை பிறந்தால் வழி பிறக்கும்: பொங்கல் பண்டிகையை நினைவு கூர்கிறார் தமிழிசை

தை பிறந்தால் வழி பிறக்கும்: பொங்கல் பண்டிகையை நினைவு கூர்கிறார் தமிழிசை

தை பிறந்தால் வழி பிறக்கும்: பொங்கல் பண்டிகையை நினைவு கூர்கிறார் தமிழிசை

2


UPDATED : ஜன 14, 2024 11:51 AM

ADDED : ஜன 14, 2024 11:18 AM

Google News

UPDATED : ஜன 14, 2024 11:51 AM ADDED : ஜன 14, 2024 11:18 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் திருநாளில் தங்களின் கருத்துரை தேவை என வேண்டுகோள் விடுத்த மாத்திரத்தில், பொங்கிப் பிரவாகம் எடுத்தவர் போல் பொழிவு நிகழ்த்தினார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்தபோது, 'பொங்கல் தானே! அது நன்றிப் பொங்கல். நாம் சோற்றிலே கை வைக்க, சேற்றிலே கால் வைத்திடும் உழவர்களுக்கு நன்றி கூறும் திருவிழா. உழவுக்குத் தேவை ஏரிழுக்கும் காளை. அந்த மாடுகளுக்கு நன்றி பாராட்டும் பெருவிழா.

உறங்கும் போது மறைந்திருந்து, விழித்தபோது வெளிச்சம் தந்து, பயிர் பச்சைக்கும் ஸ்டார்ச் வழங்க உதவும் சூரியனுக்கு நன்றிச் சமர்ப்பிக்கும் திருவிழா. தோட்டம் -துறவுகள், வீடு -வாசல்கள், காடு-கழநிகள் என- இவற்றைச் சீராக்கி, பேராக்கி, செல்வமாக்கித் தந்த நம் பெற்றோருக்கும் உற்றார்- உறவினர்களுக்கும் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் களிவிழா என பொங்கல் வழங்கும் நன்றிப் பெருக்கை அடுக்கிக் கொண்டே போனார் தமிழிசை.

உழவரைப் போற்றும் விழா தமிழர்களிடையே பொங்கல் பெயரில் நடப்பது போல், ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் இது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அகமும் புறமும் தமிழ்ப் பண்பாட்டின் இருபெரும் கூறுகள். அகத்துக்கு இல்லத்துப் பொங்கல் என்றால், புறத்துக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு. தமிழக வீரர்களின் ஆற்றமிகு அடையாளமே ஜல்லிக்கட்டு தானே! என தமிழிசை உருகிய போது, அவரின் முகத்தில் வேக ரேகைகள் துடித்தோடின.

துள்ளிப் பாயும் காளைகளுக்கோ, அடக்கியாளும் காளையர்களுக்கோ, பரவசத்தோடு குழுமிக் காணும் பார்வையாளர்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். இதுதான் தமிழிசை ராகம்.

ராஜஸ்தான் மாநிலம், இந்தூர் அருகே உள்ள கிராமத்தில் தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு யுத்தம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் நிகழும் இந்த திருவிழாவில் இரு அணிகள் எதிர் எதிரே களம் வகுத்து நிற்கும். இரு தரப்பினரும் எதிர் அணியை நோக்கிப் பட்டாசுகளை வீசி வெடிக்க செய்வர். இதனால் பல பேருக்குக் காயம். என்றாலும் அது நீடித்துத் வந்து வருகிறது. இது தமிழிசையின் இசைவு.

தீபாவளிக்கு மறுநாள் மாலை மாடு மிதிச் சடங்கு நடப்பது வாடிக்கை. பக்தர்கள் வரிசையாகப் படுத்திருக்க, அவர்கள் மீது கால்கள் பதித்து ஓடும் மாடுகள். இவற்றை ஓட ஓட விரட்டும் விழா ஏற்பாட்டாளர்கள் -என நிகழ்ச்சியே களை கட்டிவிடும். இவ்விரு சடங்குகளிலும் மனிதர்கள், மாடுகள் என்றிருக்க, இவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. எண்ணிப் பார்த்தால் மனது கனிந்து விடுகிறது' என்கிறார் அவர்.இனி தமிழிசைப்போமா?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பண்டைத் தமிழர்தம் பழமொழி. இதற்கு என்ன பொருள் தெரியுமா?. தை வந்தால் பயிர்கள் அறுவடை நடக்கும். சந்தையில் குவிந்து பணமாய்க் காய்க்கும். வளமும் நலமும் வரவேற்பு வழங்கும் அல்லவா? அறுவடையின் பின்பு நெற்களத்தில் போர் அடிப்பர். பின் வைக்கோல் குவித்து வைப்பர். இருபுறமும் வைக்கோல் குவியல்கள் இருக்க, இடையிலே வழி பிறக்கும். தை மாதத்தில் காணக் கிடைக்கும் வருடாந்திர வழி இது. தை பிறந்தால் வழி பிறக்கும்.

தமிழிசையின் விளக்கம் கேட்டபோது, விழிகள் வியப்பால் விரிந்தன. இலக்கியச் செல்வரின் இனிய செல்வி அல்லவா? புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? 'உழவர் திருநாளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தாலும், ஏனோ...இதய பாரம் கூடுகிறது' என்று துயரத்தைத் தூது விட்ட தமிழிசை, தொடர்ந்து பேசுகையில், 'வறுமை, ஏழ்மை, இல்லாமை, போதாமை என பொருளாதாரச் சிக்கலில் சிக்கிடும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே! இவர்களின் அவல நிலைக்கு விடிவு தேட வேண்டுமே! 'பொறுப்புணர்ந்து பொழிந்தார் தமிழிசை.

விவசாயிகளுக்குக் கடன், கிரடிட் கார்டு என பலதரப்பட்ட நலப் பணிகளை வழங்கிய வாஜ்பாயை அவர் நன்றியோடு நிறைவு கூர்ந்தார். 'பொங்கல் சீர் என்பது தென் மாவட்டங்களில் வஞ்சை மிகு வழக்கம். குன்றக்குடி அடிகளார் எங்கள் இல்லத்திற்கு ஆண்டுதோறும் பொங்கல் சீர் அனுப்பி வைப்பது வழக்கம். இதில் புதுப் பானை, புத்தரிசி, இஞ்சி, மஞ்சள், கரும்பு, வெல்லம் என பொங்கல் பண்டிகையின் ஆஸ்தான வஸ்துக்கள் அனைத்தும் அடங்கியிருக்கும்' என நினைவலைகளில் நீந்திய படியே விவரித்தார் தமிழிசை.

'அன்பின் அடையாளத்தை பொங்கல் சீர் மூலம் வெளிப்படுத்துவது தான் பெருஞ்சிறப்பு' என்பது அவரின் விளக்கம்.'கூட்டுப்பொங்கல் என்பது தென்தமிழகத்தின் சிறப்பு அம்சம்' என்று நெகிழ்ந்தார் தமிழிசை.

உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடு இன்றி, ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்தவித பேதமும் இல்லாமல், கூட்டாகக் குழுமி இருக்க, அவர்களுக்கிடையே நடுநாயகமாகப் புதுப்பானையில் பொங்கல் பொங்கும் போது, அனைவரும் ஒருமித்த குரலில், 'பொங்கலோ பொங்கல்' என்று முழங்குவர். சிற்றுடலே சிலிர்த்துப் போகும் அந்த தருணமே விழாவின் உச்சபட்ச மகிழ்ச்சி சமயம்' என்பது தமிழிசையின் கருத்து.

'தென் தமிழக மக்களில் பலர் வட நாட்டில் குடி பெயர்ந்து, நம் கலாச்சாரத்தைப் பேணி வருவதுடன், பரப்பவும் செய்கிறார்கள்' என்று பெருமிதம் காட்டிய தமிழிசை, 'மும்பையில், தாராவி பகுதியில் இத்தகைய கூட்டு பொங்கல் நிகழ்ச்சிகள் நடந்தபோது, நானும் பங்கேற்ற மகிழ்ந்து இருக்கிறேன்' என்கிறார். 'விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நெல் மூட்டைகள் வழங்கி மகிழும் தர்மத்திருநாள் இது. பல இடங்களில் இந்த நெல் மூட்டைகள் அவர்களுக்கு, ஓராண்டுக்கான தேவை அளவுக்கு கூட இருக்கும். ' உவகை பொங்க உரை நிகழ்த்தினார் தமிழிசை.

'மனிதர்களுக்கு மட்டுமே பண்டிகை என இருக்கும் உலகில், மாட்டுக்குக் கூட மங்கலச் சடங்குகள் செய்து கொண்டாடும் மாட்டுப் பொங்கல் என்பது நம் பாரம்பரியப் பெருமை' என்றவாறு நெற்றியை நிமிர்த்தினார் தமிழிசை.

'நாட்டுக்கம்புகளில் தான் கட்சிச் சாயங்களைப் பூசுகிறார்கள் என்றால், நம்மூர்களில் மாட்டுக் கொம்புகளில் கூட கட்சி வண்ணங்களை அடித்து, காளைகளைக் கூடக் கட்சி உறுப்பினர்கள் ஆக்கி விடுகிறார்கள்.' என நகைச்சுவை ததும்பப் பேசிய படியே விடை கொடுத்தார் தமிழிசை. நாம் நடைப்பிடித்தோம்.

ஆர் நூருல்லா செய்தியாளன்9655578786






      Dinamalar
      Follow us