/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாலுகோட்டை 'எட்டிசேரி' கண்மாயை எட்டிக்கூட பார்க்காத பொதுப்பணித்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
/
நாலுகோட்டை 'எட்டிசேரி' கண்மாயை எட்டிக்கூட பார்க்காத பொதுப்பணித்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
நாலுகோட்டை 'எட்டிசேரி' கண்மாயை எட்டிக்கூட பார்க்காத பொதுப்பணித்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
நாலுகோட்டை 'எட்டிசேரி' கண்மாயை எட்டிக்கூட பார்க்காத பொதுப்பணித்துறை விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 25, 2024 11:42 PM

சிவகங்கை : சிவகங்கை அருகே நாலுகோட்டையில் பல ஆண்டாக துார்வாரப்படாமல், நாணல், ஆகாய தாமரைகளால் புதர்மண்டிக்கிடக்கும் 'எட்டிசேரி' கண்மாயை துார்வாரி, மடைகளை சீரமைக்க வேண்டும்என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே நாலுகோட்டையில் 280 ஏக்கர் பரப்பளவில் 'எட்டிசேரி' கண்மாய் உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீர் ஈசனுார், நாலுகோட்டை, அண்ணாநகர் பகுதி மேய்ச்சல் நிலங்களில் இருந்து வரத்து கால்வாய் வழியாக, நாலுகோட்டையில் உள்ள எட்டிசேரி கண்மாயை நிரப்பும்.
கண்மாய் முழுவதுமாக நிரம்பியிருந்தால், நாலுகோட்டை, சோழபுரம் பகுதியை சேர்ந்த 250 ஏக்கர் நில விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி செய்து பயன்பெறுவர்.
குறைவான தண்ணீர் இருந்தால், ஒரு போக சாகுபடி மட்டுமே செய்யும் நிலை ஏற்படும். இக்கண்மாயில் உள்ள 5 மடைகளின் வழியே பாசன வசதி பெறுகின்றனர்.
கடந்த சில ஆண்டாக இக்கண்மாயை பொதுப்பணித்துறை நிர்வாகம் புனரமைக்காமலும், கண்மாயை ஆழப்படுத்தாமல் விட்டுவிட்டது. தற்போது கண்மாய் உட்புறத்தில் நாணல் செடி, ஆகாய தாமரைகள் வளர்ந்து, புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால், கண்மாய் உட்புறத்தில் நீர் சேகரமின்றி போனது.
எனவே, பல ஆண்டாக ஆழப்படுத்தாமல் உள்ள இக்கண்மாயை துார்வாரி, சேதமான மடைகளையும், வரத்து கால்வாய்களையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கண்மாய் மடைகள் சேதம்
ஷூல்டு கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சோழபுரம் ஆர்.மாரி கூறியதாவது: கடந்த 2012 ல் இக்கண்மாய் சீரமைக்கப்பட்டது. அதற்கு பின் கண்மாய் மற்றும் மழைநீர் வரத்து கால்வாய், மடைகளை சீரமைக்காமல் விட்டுவிட்டனர்.
தற்போது இங்குள்ள 5 மடைகளில் நடு, காரல மடை ஆகிய இரண்டும் சேதமடைந்துவிட்டன. மடைகளை புதுப்பித்து, கண்மாயை ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.