/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தாமதம்: இடைத்தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் சமாளிப்பு
/
கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தாமதம்: இடைத்தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் சமாளிப்பு
கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தாமதம்: இடைத்தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் சமாளிப்பு
கீழடி அகழாய்வுக்கு நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு தாமதம்: இடைத்தேர்தலை காரணம் காட்டி அதிகாரிகள் சமாளிப்பு
ADDED : ஜூலை 09, 2024 09:08 PM
கீழடி:கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் இழப்பீடு வழங்க முடியவில்லை என தொல்லியல் துறை தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்விற்கு கொந்தகையைச் சேர்ந்த 17 பேர் நான்கு ஏக்கர் 48 சென்ட் நிலத்தை வழங்கினர். தென்னந்தோப்புகளுக்கு இடையில் அகழாய்வு நடந்த போதும் அகழாய்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட கூடாது என கருதி மரங்களுக்கு தண்ணீர் கூட பாய்ச்ச முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது அகழாய்வு முடிந்த பின் நிலம் மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் மரங்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்சி பழைய நிலைக்கு கொண்டு வந்து காய்ப்பு திறனை அதிகப்படுத்தினர்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் அகழாய்வு நடந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டு திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவித்து ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்பட்டதுடன் ஐந்து மற்றும் ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு ஒரு சென்டிற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தருவதாக உறுதியளித்ததுடன், ஜூன் மாதத்திற்குள் நில உரிமையாளர்கள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும், 10ம் கட்ட அகழாய்விற்கு நிலம் வழங்குங்கள் என தொல்லியல் துறை பேச்சுவார்த்தை நடத்தியது.
அதிகாரிகள் உறுதியளித்ததை நம்பி நில உரிமையாளர்கள் அகழாய்வு பணிக்கு நிலம் வழங்கினர். ஜூன் முடிந்து ஜூலை எட்டாம் தேதி வரை பணம் வழங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் கீழடிக்கு வந்திருந்தார்.
நில உரிமையாளர்கள் இழப்பீடு தொகை குறித்து கேட்ட போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுவதால் பணம் வழங்க முடியவில்லை, இன்னும் 15 நாட்களில் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நில உரிமையாளர்கள் கூறுகையில், அதிகாரிகள் பணம் தராமல் அலைக்கழிப்பதுடன் சம்பந்தமே இல்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை காரணம் காட்டுகின்றனர். நிலம் வழங்கிய எங்களுக்கு அருங்காட்சியகம் திறப்பு விழாவின் போது அழைத்து கவுரப்படுத்தி இருக்கலாம் உரிய கவுரவமும் தொல்லியல் துறை சார்பில் வழங்கப்படவில்லை, இழப்பீடு தொகையும் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர், என்றனர்.