/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து நிறமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு
/
சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து நிறமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு
சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து நிறமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு
சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து நிறமி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 04, 2025 02:14 AM

எஸ்.புதுார்:சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பை கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் முகாமை நடத்தியது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர் குழுக்கள் பங்கேற்றன. இக்குழுவினர் பல்வேறு கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். அதிலிருந்து மாநில அளவில் 725 அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்ட அளவில் 19 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதுார் ஒன்றியம் வலசைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்தது.
மாணவிகள் சி.வனிதா, பெ.தனலட்சுமி, சி.சர்மிளா, சா.தனலட்சுமி, அ.திவ்யதரிஷினி ஆகியோரை கொண்ட குழு சப்பாத்திக்கள்ளி பழங்களிலிருந்து கிடைக்கும் வண்ணச் சாறு மூலம் பேனா மை, உதட்டுச் சாயம், நிறமூட்டிகள், முகப்பூச்சு களிம்பு, அழகு சாதன பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை உருவாக்கினர். இவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சப்பாத்திக்கள்ளி தொடர்பான தங்களின் ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற்றுத்தர தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சாதனை புரிந்த மாணவ குழுவினருக்கு தலைமை ஆசிரியர் கண்ணப்பன், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆசிரியர்கள் பாராட்டி இனிப்பு வழங்கினர்.