ADDED : மார் 21, 2025 05:55 AM
காரைக்குடி: காரைக்குடியில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை யொட்டி அமைக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததால் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
காரைக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் உள்ளன. காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில், பால்குட திருவிழாவையொட்டி நகரின் பெரும்பாலான இடங்களில் தற்காலிக சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில், தள்ளு வண்டிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் வசூல் செய்ய வேண்டும். பிற சாலையோர கடைகளுக்கு 1 முதல் 10 சதுர அடி வரை ரூ.20ம், 15 சதுர அடிக்கு ரூ.25ம், 20 சதுர அடி வரை ரூ.30 மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.
பண்டிகை நாட்களில் இரு மடங்கு வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் பாசி, ஊசி விற்கும் சிறு வியாபாரிகள் உட்பட பலரிடமும் ரூ. 200 முதல் ரூ. 500 வரை கட்டாய வசூல் செய்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கமிஷனர் சித்ரா கூறுகையில், சதுர அடிக்கு எவ்வளவு என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ அதைதான் வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.