/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் நெல் கொள்முதல் அமைப்பதில் இழுபறி! காலதாமதமாக திறக்கும் மையங்களால் பாதிப்பு
/
மாவட்டத்தில் நெல் கொள்முதல் அமைப்பதில் இழுபறி! காலதாமதமாக திறக்கும் மையங்களால் பாதிப்பு
மாவட்டத்தில் நெல் கொள்முதல் அமைப்பதில் இழுபறி! காலதாமதமாக திறக்கும் மையங்களால் பாதிப்பு
மாவட்டத்தில் நெல் கொள்முதல் அமைப்பதில் இழுபறி! காலதாமதமாக திறக்கும் மையங்களால் பாதிப்பு
ADDED : பிப் 06, 2024 12:00 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஆறு, கிணற்று பாசனம் மூலம் நெல் விளைந்து களத்திற்கு வந்தும், கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் முல்லை பெரியாறு, வைகை பாசனம் மற்றும் கிணற்று பாசனம் மூலம் 1.80 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். ஜன. துவக்கத்தில் அந்தந்த பகுதி விவசாயிகள் நெல் அறுவடை செய்ய துவங்கிவிட்டனர். நெல் அறுவடைக்கு ஏற்ற பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகம் ஜன., முதல் வாரத்திலேயே நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திருக்க வேண்டும். ஆனால், பிப்., ஒரு வாரம் ஆன நிலையிலும், இன்னும் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால், தனியார் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு நெல் மூடைகளை விவசாயிகள் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அறுவடை செய்த நெல்லை வாங்க கொள்முதல் நிலையம் முன்வராததால், வியாபாரிகள், விவசாயிகளிடம் நெல்லை வாங்குவதற்கு செயற்கையான போக்கை உருவாக்கி, குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர். இதனால், சிவகங்கை மாவட்ட விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல் மூடைகளை உரிய விலைக்கு விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தினர் ஜன., மாதமே துவக்க வேண்டிய கொள்முதல் நிலையங்களை திறக்காமல், முதற்கட்டமாக 23 மையங்களில் எடை இயந்திரம், பிற தளவாட சாமான்களை மட்டுமே வைத்துவிட்டு, கொள்முதல் செய்வதற்கான ஊழியர்களின்றி கொள்முதல் நிலையத்தை திறக்காமல் வைத்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் விரைந்து அனைத்து கொள்முதல் நிலையங்களையும் திறந்து, விவசாயிகளிடம் அரசு நிர்ணயித்த விலைக்கு நெல்லை வாங்க உரிய நடவடிக்கை எடுத்து, வியாபாரிகள் தலையீட்டை தடுக்க வேண்டும். *
53 நெல் கொள்முதல் மையம்:கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்ட அறிக்கையில், முதற்கட்டமாக இடைக்காட்டூர், முத்தனேந்தல், மேலப்பிடாவூர், சோமாத்துார், சின்ன கண்ணனுார், விளத்துார், ராஜகம்பீரம், நல்லாண்டிபுரம், ே.விளாக்குளம், சிப்காட், மேலநெட்டூர், மேலப்பசலை, குலையனுார், கொம்புக்காரனேந்தல், முனைவென்றி, நாகமுகுந்தன்குடி, பிரமனுார், கீழராங்கியம், ஏனாதி, முதுவந்திடல், பழையனுார், தஞ்சாக்கூர், லாடனேந்தல், கீழடி, நாடமங்கலம், மேலச்சேத்துார், காவனுார், எஸ்.ஆர்., பட்டிணம் ஆகிய 28 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக 25 மையம் என 53 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். இங்கு சன்னரக நெல் மூடை (100 கிலோ) ரூ.2,310, பொதுரக நெல் மூடை ரூ.2,265 க்கும் விற்பனை செய்யலாம். விவசாயிகள் பெயர், ஆதார் எண், புல எண், பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். *
ஓரிரு நாட்களில் தீர்வு வரும்: நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறியதாவது, ஏற்கனவே 28 கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை வாங்கி வருகிறோம். அடுத்தகட்டமாக 25 மையம் திறப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். வி.ஏ.ஓ.,க்கள் மூலம் விவசாயிகளின் அடங்கல் விபரம் ஆன்லைனில் பெறப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தடையின்றி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் பெறப்படும், என்றார். //