/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
ADDED : பிப் 29, 2024 11:41 PM

சிவகங்கை- மாவட்டத்தில் செயல்படும் நெல்கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பெயரை கூறி மூடைக்கு (41 கிலோ) ரூ.50 வரை கட்டாய வசூல் நடப்பதாக கலெக்டர் தலைமையில் சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர்.
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், கூட்டுறவு இணை பதிவாளர் கே.ஜினு, கோட்டாச்சியர்கள் சிவகங்கை விஜயகுமார், தேவகோட்டை பால்துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன்,பொது மேலாளர் மாரிச்சாமி, உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கராஜன் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
போஸ், அம்பலத்தாடி: திருப்புவனம் ஒன்றியம், அம்பலத்தாடி கிராம கண்மாய், வரத்து கால்வாய்களை புதுப்பித்துதர வேண்டும்.
அய்யாச்சாமி, கீழநெட்டூர்: இளையான்குடி அருகே நல்லாண்டிபுரத்தில் துணைமின் நிலையம் அமைக்குமாறு கோரிக்கை வைக்கிறேன். மானாமதுரை துணை மின்நிலையத்தில் இருந்து ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லை வரையிலான கிராமங்கள் வரை இங்கிருந்து தான் மின்சாரம் எடுத்து செல்கின்றனர். இந்த துணை மின்நிலையத்தை பிரிக்க வேண்டும்.
ராமசந்திரன், சிவகங்கை: மாவட்டத்தில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்து, மனிதர், ஆடு, மாடுகளையும் விரட்டி கடிக்கின்றன. நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கார்த்திகேயன், இணை இயக்குனர், கால்நடை துறை: நாய்கள் கருத்தடை மையம் ஏற்படுத்த அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக நகராட்சி பகுதியில் ஆப்பரேஷன் தியேட்டர் கட்டி, விலங்குகள் நல வாரிய விதிப்படி நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும்.
கன்னியப்பன், லட்சுமிபுரம்: இளையான்குடி பி.டி.ஓ., கிராம சபையில் வழங்கும் மனுக்களுக்கு தீர்வு காணாமல், உயர் அதிகாரிகளிடம் மனு செய்யுமாறு கூறுகிறார். அப்படியென்றால் கிராம சபையில் மனு அளிப்பது விரயமா.
சந்திரன், இந்திய கம்யூ., சிவகங்கை: புளியங்குளம் முதல் சூரவத்தி வழியாக காளையார்கோவிலுக்கு பஸ் விட வேண்டும். பெரியாறு பாசன கால்வாய் மூலம் 2,800 எக்டேர் பாசன வசதி பெறும் 48 கால்வாய், கட்டாணிபட்டி அருகே கால்வாய் துார்வார வேண்டும். பெரியாறு அணை தண்ணீர் தினமும் 60 கன அடி நீரை பெற்றுத்தர வேண்டும்.
விஸ்வநாதன், சிவகங்கை: வறட்சியால் 33 சதவீதத்திற்கு மேல் பாதித்த பயிர்களுக்கு தான் இழப்பீடு என்கின்றனர். தனியாரிடம் காப்பீடு திட்டத்தை அனுமதிக்காமல், அரசே காப்பீடு திட்டத்தை நடத்த வேண்டும்.
மோகன், கண்டரமாணிக்கம்: மாவட்ட அளவில் நெல்கொள்முதல் நிலையங்களில், மூடைக்கு (41 கிலோ) கமிஷனாக விவசாயிகளிடம் ரூ.40 முதல் 50 வரை அதிகாரிகள், கட்சியினர் பெயரை சொல்லி வசூலிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.
அருண்பிரசாத், மண்டல மேலாளர் (நுகர்பொருள் வாணிப கழகம்): கடந்த ஆண்டு 65 கொள்முதல் நிலையம் மூலம் 55,144 டன் நெல் கொள்முதல் செய்ததில், 12, 782 விவசாயிகள் பயன் அடைந்தனர்.
இந்த ஆண்டு 57 நிலையம் மூலம் 15 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். 2,851 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

