/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுங்கச்சாவடியில் அரசு பஸ் நிறுத்தம்
/
சுங்கச்சாவடியில் அரசு பஸ் நிறுத்தம்
ADDED : ஜன 09, 2024 11:48 PM

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் பாஸ்டேக்கில் போதிய இருப்பு இல்லை என அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகினர்.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இரு இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலையை பயன்படுத்து வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியை காரைக்குடி கோட்டத்தைச் சேர்ந்த 95 பஸ்களும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 40 பஸ்களும் சலுகை கட்டணத்தில் கடக்கின்றன. சுங்கச்சாவடியை கடக்க அரசு பஸ்களுக்கு ஒரு முறை 300 ரூபாயும், இருமுறை என்றால் 450 ரூபாயும் கட்டணம். பாஸ்டேக் இல்லாவிட்டால் ஒரு முறை 600 ரூபாயும் இருமுறை ஆயிரத்து 200 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.நேற்று சிவகங்கை பணிமனையைச் சேர்ந்த பஸ் மதுரையில் இருந்து காலை 9:30 மணிக்கு ராமேஸ்வரம் கிளம்பியது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி வரும் போது பாஸ் டேக்கில் பணம் இல்லை என வழிவிட மறுத்தனர். இதனையடுத்து பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்திவிட்டார். 30 நிமிடங்களுக்கு மேல் பஸ் நின்ற நிலையில் அதிகாரிகள் தலையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களிடம் சமாதானம் பேசி பஸ் சுங்கச்சாவடியை கடக்க செய்தனர்.
சுங்க சாவடி ஊழியர்கள் கூறுகையில்: அரசு பஸ்களில் பாஸ்டேக் ரீசார்ஜ் செய்வதில்லை. பணமே இல்லாத நிலையில் எப்படி அனுமதிக்க முடியும், மேலும் சலுகை கட்டணத்தில் 50 முறை தான் கடக்க முடியும். ஒரு சில பஸ்கள் 100க்கும் மேற்பட்ட முறை கடக்கின்றன. இதில் ஸ்பேர் பஸ்களையும் பாஸ்டேக்கில் பணம் இன்றி இயக்குகின்றனர், என்றனர்.

