ADDED : ஜூன் 12, 2025 10:51 PM
திருப்புவனம்; திருப்புவனம் மாட்டுச் சந்தையில் கறவை மாடுகள், கன்று குட்டிகள் அதிகம் விற்பனையாகின.
திருப்புவனம் வட்டாரத்தில் கீழடி, கொந்தகை, மடப்புரம், மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம் உள்ளிட்ட பகுதிகளில் கறவை மாடு, எருமை மாடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. திருப்புவனத்தில் வாரம்தோறும் புதன்கிழமை மாட்டுச் சந்தை அதிகாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெறும்.
திருப்புவனத்தை சுற்றியுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கறவை மாடுகள், கன்று குட்டிகளை சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.
வீடுகளில் வளர்க்க கறவை மாடுகள் வாங்கவும் விவசாயிகள் வருவார்கள். சந்தையில் 250 மாடுகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கறவை மாடுகள் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரையிலும் கன்று குட்டிகள் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. வாரம் தோறும் 100 முதல் 150 மாடுகள் வரையே விற்பனைக்கு வரும், இந்த வாரம் 250 மாடுகள் வரை விற்பனை செய்யப்பட்டன.