/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதை மாறும் அரசு பஸ்களால் பயணிகள் குழப்பம்
/
பாதை மாறும் அரசு பஸ்களால் பயணிகள் குழப்பம்
ADDED : செப் 27, 2025 04:07 AM
கீழடி: மதுரை விரகனுார் ரிங்ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் பல கீழடி, கொந்தகை, சோளங்குருணி வழியாக செல்வதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, திருச்செந்தூர்,தென்காசி, திருநெல்வேலி நகரங்களுக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா வாகனங்கள், சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் பலவும் ரிங்ரோட்டை கடந்து செல்கின்றன.
மதுரை விரகனுார் ரிங் ரோட்டில் இருந்து ராமேஸ்வரம்,அருப்புக்கோட்டை பிரியும் இடத்தில் எந்த வித பெயர் பலகையும் இல்லை. ஒரே இடத்தில் இடது பக்கமாக பாதை பிரிவதால் புதிதாக வரும் பலரும் ராமேஸ்வரம் வழித்தடத்தை தேர்வு செய்து வந்து விடுகின்றனர். கீழடி விலக்கு வரை பெயர் பலகையே இல்லை. கீழடி விலக்கு வந்த பின் தான் ராமேஸ்வரம் வழித்தடம் என தெரிய வருகிறது. ஒருசில வாகனங்கள் மீண்டும் வந்த வழியே திரும்பி அருப்புக்கோட்டை, தூத்துக்குடி செல்கின்றன.
பெரும்பாலான வாகனங்கள் வேறு வழியின்றி கீழடி,கொந்தகை, சத்யாநகர், விராதனுார், சோளங்குருணி வழியாக அருப்புக்கோட்டை ரோட்டை அடைந்து அதன் பின் பயணம் மேற்கொள்கின்றனர். தினசரி செல்லும் வாகனங்களே பாதை மாறி வரும் நிலையில் வெளியூர் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தடம் மாறி அலைச்சலுக்கு ஆளாகின்றனர். மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலை அமைத்ததில் இருந்தே பாதை மாறி வருவது தொடர்கதையாகி வருகிறது.
பலமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார் அளித்தும் இன்று வரை பெயர் பலகை பொருத்தப்படவே இல்லை. நேற்று முன் தினம் காலை மதுரையில் இருந்து தினசரி அருப்புக்கோட்டைக்கு இயக்கப்படும் அரசு பஸ் பாதை மாறி வந்தததுடன் மீண்டும் 10 கி.மீ., பயணம் செய்ய வேண்டுமே என கருதி கீழடி, கொந்தகை, சத்யாநகர், சோளங்குருணி வழியாக அருப்புக்கோட்டை சென்றது. பாதை தவறி செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதுடன் அச்சமடைகின்றனர். மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை செல்லும் பாதைகளை குறிப்பிட்டு பெயர் பலகை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

