/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் இணைப்பை துண்டிக்கும் போலீசார்; தவிக்கும் பொதுமக்கள்
/
குடிநீர் இணைப்பை துண்டிக்கும் போலீசார்; தவிக்கும் பொதுமக்கள்
குடிநீர் இணைப்பை துண்டிக்கும் போலீசார்; தவிக்கும் பொதுமக்கள்
குடிநீர் இணைப்பை துண்டிக்கும் போலீசார்; தவிக்கும் பொதுமக்கள்
ADDED : ஜன 17, 2024 12:24 AM
திருப்புவனம் ; திருப்புவனத்தில் குடிநீர் மோட்டார் இயங்குவது தொந்தரவாக இருப்பதாக கருதி போலீசார் மின் இணைப்பை துண்டிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் பேரூராட்சி சார்பாக போலீஸ் ஸ்டேசன் பின்புறம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கை பம்பு பொருத்தப்பட்டது.
வண்டல் நகர், அண்ணாநகர், கே.கே.,நகர், இந்திராநகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வந்து குடிநீர் எடுத்து செல்வது வழக்கம்.
மற்ற பகுதிகளை காட்டிலும் இங்கு குடிநீர் சுவையாக இருப்பதால் பலரும் இங்கு வந்து குடிநீர் எடுத்துச் செல்வார்கள். பேரூராட்சி சார்பில் 5 ஆண்டிற்கு முன் கை பம்பு அகற்றப்பட்டு மோட்டார் பொருத்தப்பட்டு சிறிய சின்டெக்ஸ் தொட்டியும் வைக்கப்பட்டு அதில் இருந்து காவலர் குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.
ஆழ்துளை கிணறு அருகே இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளது. குடிநீர் மோட்டார் இயங்கும் போது பொதுமக்கள், வர்த்தக நிறுவன தேவைக்கு கூட்டமாக நின்று தண்ணீர் பிடிப்பதால் மோட்டார் அருகே குடியிருப்புகளில் உள்ள போலீசாருக்கு தொந்தரவாக இருப்பதாக கருதி மின் இணைப்பை துண்டித்து விடுகின்றனர்.
இதனால் காலையில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. போலீசார் வெளியில் கிளம்பும் போது மீண்டும் மின் இணைப்பு தரப்படும்.
சில சமயம் போலீசார் மறந்து விட்டால் அன்று முழுவதும் குடிநீர் மோட்டார் இயக்க முடிவதில்லை.
திருப்புவனம் போலீசார் குடியிருப்பில் திருப்பாச்சேத்தி, திருப்புவனம் போலீசார் தவிர்த்து வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்களும் விதிகளை மீறி குடியிருந்து வருவதுடன் மின் இணைப்பையும் துண்டிப்பதால் பொதுமக்கள் குடிநீருக்காக காத்து கிடக்க வேண்டியுள்ளது.
நகரில் வசிக்கும் பலரும் காலையில் குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய பணிகளை முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று விடுவார்கள், குடிநீர் மோட்டார் இணைப்பை துண்டிப்பதால் ஒரு குடம் 15 ரூபாய் என காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.
மின் இணைப்பை துண்டிப்பது குறித்து போலீசாரிடம் கேட்ட போது நாங்கள் யாரும் மின்சாரத்தை துண்டிப்பதில்லை, என்றனர். ஆனால் காலை எட்டுமணி வரை மோட்டார் இயங்காது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

