/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிராவயல் மஞ்சு விரட்டிற்காக ஏற்பாடு மும்முரம்! ஜன.17 காலை 10:30 மணிக்கு துவக்கம்
/
சிராவயல் மஞ்சு விரட்டிற்காக ஏற்பாடு மும்முரம்! ஜன.17 காலை 10:30 மணிக்கு துவக்கம்
சிராவயல் மஞ்சு விரட்டிற்காக ஏற்பாடு மும்முரம்! ஜன.17 காலை 10:30 மணிக்கு துவக்கம்
சிராவயல் மஞ்சு விரட்டிற்காக ஏற்பாடு மும்முரம்! ஜன.17 காலை 10:30 மணிக்கு துவக்கம்
ADDED : ஜன 09, 2024 11:46 PM

நாச்சியாபுரம் : கல்லல் ஒன்றியம் சிராவயல் மஞ்சுவிரட்டு பொட்டலில் ஜன.17 ல் நடக்க உள்ள மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சிராவயலில் பொங்கலை அடுத்து ஜன.17ல் பல நுாற்றாண்டுகளாக நடைபெறும் மஞ்சுவிரட்டு புகழ் பெற்றது. பரந்து விரிந்த பிரத்யேக மஞ்சு விரட்டு மைதானத்தில் காலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கில் கூடும் பார்வையாளர்களால் சிராவயல் ' களை ' கட்டும்.
மஞ்சுவிரட்டு தொழுவிலிருந்து துண்டு கட்டப்பட்ட காளைகள் கூட்டமாக வெளியேறுவதும், வாலிபர்கள் தங்களுக்கு பிடித்த காளைகளை பின் தொடர்ந்து சென்று திமிலை, கொம்பை பிடித்து நிறுத்தி கழுத்தில் கட்டிய துண்டை அவிழ்த்து சாகசம் நிகழ்த்துவதும், வீர மிக்க காளைகள் பொட்டலில் நின்று மணிக் கணக்கில் வீரர்களை பந்தாடுவதும்.... மஞ்சு விரட்டின் தொன்மையான பாரம்பரியம்.
இப்போது ஊராட்சியில் தீர்மானம், மாவட்ட நிர்வாகம் அரசிதழில் வெளியிட ஏற்பாடு, அறிவிப்பு, ஆலோசனை, கட்டுப்பாடு, காளைகள், பிடி வீரர்களுக்கு பதிவு, சோதனை, உயர் கோபுரத்தில் போலீஸ் கண்காணிப்பு, மாடு பிடிப்பதை சிலர் மட்டும் பார்க்கும் வகையில் தடுப்பு, பிடிக்க சில விநாடிகளே தரப்படும் வாய்ப்பு, காளையைப் பார்த்து பயந்து வேலித் தடுப்பில் ஏறிக் கொள்ளும் வீரர்கள் ( !) , பரிசுப் பொருட்கள் .....என்று எல்லாமே தற்போது மாறி விட்டது.
ஆனால் மஞ்சுவிரட்டு என்ற பெயர் மட்டும் மாறவில்லை. காளைகளின் கழுத்தில் ' மஞ்சி' என்ற வஸ்திரத்தை கட்டி விரட்டப்படுவதும், வீரர்கள் விரட்டுவதால் காளைகள் தொலை துாரம் ஓடுவதும், பொலி காளைகளாக சில காலம் சுற்றித் திரிவதுமே மஞ்சுவிரட்டின் சிறப்பு. ஆனால் இன்று பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது.
இருப்பினும் இன்றும் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை. அவர்கள் ரசிக்க நுாற்றுக்கணக்கில் ' கட்டுமாடுகள்' அவிழ்ப்பு என்று சிராவயல் கல கலப்பாக காணப்படும். இருந்தாலும் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மனசை பதறச் செய்யும். தற்போது சிராவயலில் 17 ஏக்கர் பொட்டலில் வேலுச்சாமி தலைமையில் மஞ்சுவிரட்டுக்கு ' ஜல்லிக்கட்டுப் பாணியில் ஏற்பாடு நடந்து வருகிறது.
மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை
வேலுச்சாமி கூறுகையில்,' பெரியநாயகி அம்மன் கோயில், தேனாட்சி அம்மன் கோயில், முன்னோர்கள் வழிபாடு முடிந்து காலை 10:30 மணிக்கு மஞ்சுவிரட்டு துவங்கும். துண்டு கட்டி ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்படும். பிடிபடாத காளை, பிடித்த வீரர்களுக்கு பரிசு உண்டு. வருவாய், சுகாதார, கால்நடை, போலீஸ், தீயணைப்பு துறையினர் ஒருங்கிணைப்புடன் நடைபெறுகிறது. 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மஞ்சுவிரட்டு பொட்டலில் பிரமாண்டமான மஞ்சுவிரட்டு திடல் அமைத்து பாரம்பரிய வழியில் காளைகள் விளையாடும் வகையில் அமைக்க முதல்வரை வேண்டியுள்ளோம்' என்றார்.
சிராவயலில் காளைகள் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த ஆண்டு நடந்தது. ஆனால் அதில் பல குளறுபடி காணப்பட்டன. இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன்னதாகவே துவக்க காளை உரிமையாளர்கள் கோரியுள்ளனர். மேலும் மஞ்சு விரட்டுக்கான பிரத்யேகமான வழிமுறைகளை உருவாக்கவும் அரசை கோரியுள்ளனர்.
தாசில்தார் ஆனந்த் கூறுகையில்,' மஞ்சுவிரட்டுகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறும். கால்நடைத்துறையினரால் காளைகள் ஆன் லைன் பதிவு மூலம் நடத்தப்படும். திடலில் பாதுகாப்பு வசதிகள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் இறுதி செய்யப்படும். கடந்த ஆண்டைப் போல நடத்தப்படும்' என்றார்

