/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் பள்ளி கட்டுமான பணி; மாணவிகள் செல்ல வழியின்றி தவிப்பு
/
திருப்புவனம் பள்ளி கட்டுமான பணி; மாணவிகள் செல்ல வழியின்றி தவிப்பு
திருப்புவனம் பள்ளி கட்டுமான பணி; மாணவிகள் செல்ல வழியின்றி தவிப்பு
திருப்புவனம் பள்ளி கட்டுமான பணி; மாணவிகள் செல்ல வழியின்றி தவிப்பு
ADDED : ஜன 17, 2024 12:21 AM

திருப்புவனம் : திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளுக்காக பாதை அடைக்கப்பட்டதால் குறுகிய பாதை வழியாக மாணவிகள் வெளியேற வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்புவனம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2,200 மாணவிகள் படிக்கின்றனர். 70 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் பெண்களுக்கு என தனியாக உள்ள ஒரே ஒரு பள்ளி. இட நெருக்கடியாக இருப்பதால் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கையை அடுத்து டிச., 27ல் ரூ.2.97 கோடியில் 14 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி சென்றார்.
சிவகங்கை ரோட்டில் இருந்து மாணவிகள் பள்ளியினுள் வந்து கொண்டிருந்தனர். கட்டட பணிகள் நடப்பதால் பள்ளியின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவுப் பாதை அடைக்கப்பட்டு மேற்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக குறுகிய பாதையை அமைத்தனர். மாலையில் பள்ளி விடும் போது, மாணவிகள் மொத்தமாக வெளியேறுவதால் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்களை பிடிக்க மாணவிகள் ஓடுகின்றனர்.
மேலும் பஸ் நிறுத்தம் சற்று தள்ளி இருப்பதால் மாற்றுத்திறனாளி மாணவிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்து அகற்றி விட்டு புதிய பாதை தற்காலிகமாக உருவாக்கலாம், இதன் மூலம் மாணவிகள் இரண்டு பகுதிகளிலும் வெளியேற வாய்ப்புண்டு, விபத்துகளும் தவிர்க்கப்படும். ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய முடிவு எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால் மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

