/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு
/
குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 26, 2025 01:14 AM

சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றியம் அனுமந்தக்குடி ஊராட்சியை சேர்ந்தது ஆலங்குடி. குடிநீராக பயன்பட்டு வந்த ஊரணி தற்போது மழையின்றி வறண்டு முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. 5 கி.மீ. தொலைவில் உள்ள துடுப்பூர் கிராமத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தண்ணீர் போதிய அளவு கிடைக்க வில்லை.
கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ஊருக்கு வெளியே இரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் உப்புத் தண்ணீராக இருந்ததால் குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் 2023ல் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் 80 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட நிலையில் இணைப்பு வழங்கப்பட வில்லை.
இதற்கிடையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இந்த கிராமம் சேர்க்கப்பட்டது. ஆலங்குடி கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்க குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது.
இரண்டு மேல்நிலை தொட்டியும் கட்டப்பட்டது. இரண்டு வருடத்திற்கு மேலாகியும் தண்ணீரை தொட்டியில் ஏற்ற குழாய் இணைப்பு கொடுக்கவில்லை.
தற்போது மேல்நிலை தொட்டி வரை குழாயும், குடிநீரும் வந்து விட்டது. குழாயில் வரும் நீரை தொட்டிக்கு ஏற்ற இணைப்பு கொடுக்காததால் காவிரி தண்ணீர் வீணாகி குளம் போல் தேங்கி நிற்கிறது.
கடந்த சில தினங்களாக எந்த தண்ணீரும் கிடைக்காமல் கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் கிராமத்தினர் வற்புறுத்தலின் காரணமாக உப்புத் தண்ணீரை மேல்நிலை தொட்டியில் தனி குழாய் மூலம் ஏற்றி வழங்கப்படுகிறது.
ஒன்றிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தை பார்வையிட்டு மேல்நிலை தொட்டிகளை ஆய்வு செய்து காவிரி கூட்டு குடிநீர் குழாயை மேல்நிலை தொட்டிக்கு இணைப்பு கொடுத்து நீரை ஏற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.