
காரைக்குடி நகராட்சியையொட்டி அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சி ஸ்ரீராம் நகர் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. காரைக்குடி அறந்தாங்கி செல்லும் ரோட்டில் ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இவ்வழியாக சென்னை திருச்சி மார்க்கமாக தினமும் 8க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், விரைவு ரயில்களும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும், முக்கிய சாலையாகவும் உள்ள ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. பள்ளத்துார் கண்டனுார் புதுவயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிற மாவட்டங்கள் இருந்து தினமும் நெல் மற்றும் அரிசி ஏற்றிச் செல்ல ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன.
ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திற்கு 21 தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அளித்தது.
அதில்,, ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் மேம்பாலமும் ஒன்று. தேர்தல் முடிந்த சில மாதங்களில் மேம்பால பணி கட்டுவதற்கான ஆய்வுப் பணி மேற் கொள்ளப்பட்டதாகவும் அதற்கென முதல் தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின. ஆனால், இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை.
எனவே, பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்து கிடப்பதை தவிர்த்திட ரயில்வே மேம்பாலம் விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

