/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெறிநாய் கடிக்கு 11,707 பேர் பாதிப்பு இனியாவது விழிக்குமா மாவட்ட நிர்வாகம்
/
வெறிநாய் கடிக்கு 11,707 பேர் பாதிப்பு இனியாவது விழிக்குமா மாவட்ட நிர்வாகம்
வெறிநாய் கடிக்கு 11,707 பேர் பாதிப்பு இனியாவது விழிக்குமா மாவட்ட நிர்வாகம்
வெறிநாய் கடிக்கு 11,707 பேர் பாதிப்பு இனியாவது விழிக்குமா மாவட்ட நிர்வாகம்
ADDED : அக் 04, 2025 03:45 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தெருக்களில் திரியும் வெறி நாய்கள் கடித்ததில், எட்டு மாதத்தில் மட்டும் 11,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் காரைக்குடி மாநகராட்சி, சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் தெருக்கள், வீடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன. வீடுகளில் முறையாக தடுப்பூசி போட்டு பராமரிக்கப்படும் நாய்களுக்கு மட்டுமே எளிதில் வெறிப்பிடிப்பதில்லை.
அதே நேரம் எந்தவித பராமரிப்பின்றி உணவு, இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதன் மூலமும், உரிய காலத்தில் இனச்சேர்க்கை செய்ய முடியாத நிலையில் ஆண் நாய்களுக்கு வெறிப்பிடிக்கின்றன. இது போன்ற வெறிபிடித்த நாய்கள் பிற நாய்களை கடித்தாலே அந்த நாய்களுக்கும் வெறி பிடித்து விடுகின்றன.
நேற்று முன்தினம் இரவு காஞ்சிரங்கால் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை (பாம்கோ) அலுவலக தெருவில் நாய் கடித்து இரு பெண், ஒரு சிறுவன், 3 கன்று குட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிறுவன் உட்பட 3 பேருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது.
11,707 பேர் பாதிப்பு வெறிப்பிடித்து திரியும் நாய்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற தவறுவோருக்கு 'ரேபிஸ் நோய்' தாக்கி உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னையை தவிர்க்கவே நாய்களுக்கு கருத்தடை செய்யவும், ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகளை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், கால்நடைத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை செய்யவோ, தடுப்பூசி போடவோ அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே இம்மாவட்டத்தில் 2025 ஜன., முதல் ஆக., வரை மட்டுமே வெறி நாய்கள் கடித்து 11,707 பேர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். செப்., மாதத்தில் தோராயமாக வெறிநாய்கள் கடித்து 1,200 க்கும் மேற்பட்டவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
உள்ளாட்சிகளுக்கு தான் முழு பொறுப்பு கால்நடைத்துறை அதிகாரி கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கி, அதை முறைப்படி பராமரிக்க அதன் உரிமையாளர்களிடம் வலியுறுத்த வேண்டும். அதே நேரம் தெருக்களில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட்டும், கருத்தடை செய்ய வேண்டும். காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் மட்டுமே 500 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் தான் தெருவில் திரியும் நாய்களை 'பட்டர் பிளை நெட்' மூலம் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டும். குறிப்பாக உணவு, இறைச்சி கழிவு அதிகம் கொட்டப்படும் பகுதியில் தான் நாய்கள் அதிகம் திரிகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் உணவு, குப்பை கழிவுகளை முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்தால் மட்டுமே, உணவுக்காக ரோட்டில் திரியும் நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என்றார்.

