/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
நாச்சியார்கோவில் அருகே சிறுமி, வாலிபர் மர்ம சாவு
/
நாச்சியார்கோவில் அருகே சிறுமி, வாலிபர் மர்ம சாவு
ADDED : பிப் 23, 2024 10:23 PM

வண்டுவாஞ்சேரி:தஞ்சாவூர் மாவட்டம், வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகன் திலீபன், 20, விவசாய கூலி. இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த திலீபனின் தந்தை மதியழகன், 'அந்த பெண் உனக்கு தங்கை முறை; அவரை காதலிக்காதே' என கண்டித்துள்ளார். மீறி இருவரும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிறுமியை திலீபன் தனியாக சந்தித்துள்ளார். வெகு நேரமாகியும் வீட்டிற்கு சிறுமி வராததால், சிறுமியின் தாய் சென்று பார்த்த போது, சிறுமி முகம், கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் ரத்த காயங்களுடன் தரையில் கிடந்தார். திலீபனும் அருகிலுள்ள வேப்பமரத்தில் தன் லுங்கியில் துாக்கிட்டு இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் அலறினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், இருவரையும் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். இருவரும் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த சாவு குறித்து, நாச்சியார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.