/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருஷநாடு பகுதியில் இலவம் காய்கள் வெடித்து பஞ்சு வீணாகிறது ; விலை இன்றி பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்
/
வருஷநாடு பகுதியில் இலவம் காய்கள் வெடித்து பஞ்சு வீணாகிறது ; விலை இன்றி பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்
வருஷநாடு பகுதியில் இலவம் காய்கள் வெடித்து பஞ்சு வீணாகிறது ; விலை இன்றி பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்
வருஷநாடு பகுதியில் இலவம் காய்கள் வெடித்து பஞ்சு வீணாகிறது ; விலை இன்றி பறிக்காமல் மரத்திலேயே விடும் அவலம்
ADDED : ஜூன் 29, 2024 05:35 AM
கடமலைக்குண்டு : வருஷநாடு மலைக் கிராமங்களில் விளையும் இலவம் பஞ்சுக்கு போதிய விலை கிடைக்காததால் விளைந்த காய்களை பறிக்காமல் மரங்களிலேயே வெடித்து பஞ்சு வீணாகிறது.
வருஷநாடு மலைப்பகுதியில் ஓட்டணை, கோவிலாங்குளம், வருஷநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, வாலிப்பாறை, சிங்கராஜபுரம், மணலாத்து குடிசை, ராயர் கோட்டை, முருக்கோடை, வண்டியூர், வீர சின்னம்மாள்புரம், காமராஜபுரம், அரசரடி, குமணன் தொழு உட்பட 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான இலவ மரங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் துங்கும் இலவம் பஞ்சு சீசன் ஆகஸ்ட் வரை நீடிக்கும். இப்பகுதியில் விளையும் இலவம் காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து தமிழகம் முழுவதும் அனுப்பப்படும். கடந்த ஆண்டு நல்ல மழை கிடைத்ததால் மரங்களில் இலவம் காய்கள் அதிகம் விளைந்துள்ளன. முற்றிய காய்களை பறித்து பஞ்சு பிரித்தெடுக்கும் பருவத்தில் அடுத்தடுத்து பெய்த மழையால் பஞ்சு எடுக்கும் தொழில் பாதிப்படைந்தது.
அதே நேரத்தில் பிரித்தெடுத்த பஞ்சுக்கும் போதிய விலை இல்லை. இதனால் இலவம் பஞ்சு சேகரிப்பில் விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. கூடுதல் செலவினங்களால் காய்கள் பறித்தல், பஞ்சு பிரித்தெடுத்தல் தொழில்கள் முடங்கி உள்ளது.
பல ஏக்கரில் உள்ள மரங்களில் உள்ள காய்கள் வெடித்து பஞ்சு காற்றில் பறந்து வீணாகிறது.
இலவம்பஞ்சு விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு மரங்களில் பிஞ்சுகள் எடுத்த நேரத்தில் பெய்த மழையால் பிஞ்சுகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. மீண்டும் காய்த்து முதிர்ந்த காய்களை பறிக்கும் நேரத்தில் மழையால் பாதித்தது. ஏற்கனவே எடுத்து இருப்பில் வைத்திருக்கும் பஞ்சு கிலோ ரூ.70 வரை விலைபோகிறது. இலவம் பஞ்சுக்கான விலை, இந்த ஆண்டு கிலோ ரூ.100 வரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இலவம் பஞ்சு பறிக்கும் தொழிலில் கூலி ஆட்களுக்கான செலவு அதிகமாகிறது. விலை குறைவால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இலவம் பஞ்சுக்கு அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பஞ்சுக்கான விலை கிடைக்கவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் வருஷநாடு மலைப்பகுதியில் இலவம்பஞ்சு தொழிலை நம்பி உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர்.