/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் : நால்வர் கைது
/
கம்பத்தில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் : நால்வர் கைது
ADDED : ஜூன் 10, 2024 04:48 AM
கம்பம், : கம்பத்தில் நேற்று போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ. - கோதண்டராமன் தலைமையிலான போலீஸ் குழு, கம்பம் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 5 கிலோ 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இருவரும் சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த செல்வம் 44, மதுரை மாவட்டம் மேக்கிழார் பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி 40 என தெரியவந்தது.
கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்து, அவர்கள் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா பதுக்கி இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் கம்பம் ஜல்லிகட்டு தெரு ரெங்கபிரபு 38, நாராயணத்தேவன்பட்டி ரஞ்சித்குமார் 30 என தெரியவந்தது. ஆக, 11 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நால்வர் கைது செய்யப்பட்டனர். கம்பம் வடக்கு , தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.