/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
/
பட்டாசு புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஜூன் 09, 2024 04:59 AM

கூடலுார், : கூடலுாரில் அதிகளவு பட்டாசு வெடிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் மக்கள் பாதிக்கின்றனர். இதனை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புலம்பினர்.
கூடலுாரில் கடந்த சில மாதங்களாக நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது. சுப நிகழ்ச்சிகளில் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு செல்லும் வழிநெடுகிலும் பட்டாசு வெடித்து வெளியேறும் புகையால் காற்று மாசுபடுகிறது. பேப்பர் கழிவுகள் ரோடுகளில் குவிகிறது. தீபாவளி நாட்களில் மட்டும் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் கட்டுப்பாடு விதிக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்ற நாட்களிலும் பட்டாசு வெடிப்பதை கண்டு கொள்வதில்லை. இது குறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அப்போதைய நகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது. அனைத்து திருமண மண்டபங்களிலும் பட்டாசு வெடிக்க தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது காற்றில் பறக்க விட்டு மாசு ஏற்படும் வகையில் பட்டாசு வெடிப்பது அதிகரித்துள்ளது.
கஜேந்திரன், செயலாளர், கூடலுார் மக்கள் மன்றம்: அனைத்து விசேஷங்களுக்கும் பட்டாசு வெடிப்பதை கடமையாக செய்கின்றனர். சில தினங்களுக்கு முன் விசேஷ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஒரு குழந்தையின் கண் பாதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி சத்தத்தால் இதய நோயாளிகள் , முதியவர்களும் பாதிக்கின்றனர். மாசுக்கட்டுப்பாடு வாரியம், போலீசார் இணைந்து தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூடலுார் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்.