/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
/
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
நகராட்சி தலைவரை மாற்ற தி.மு.க.,கவுன்சிலர்கள் போர்க்கொடி தேனியில் 13 பேர் ராஜினாமா செய்யவும் முடிவு
ADDED : ஜன 10, 2024 01:11 AM
தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா (தி.மு.க.), அவரது கணவரும், கவுன்சிலருமான பாலமுருகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நகராட்சி தலைவரை மாற்ற வலியுறுத்தி தி.மு.க., கவுன்சிலர்கள் 13 பேர் முதல்வர், அமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பி உள்ளனர். நடவடிக்கை இல்லையெனில் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 தி.மு.க., 3 காங்கிரஸ் என 21 வார்டுகளில் வென்றது. அப்போதைய தி.மு.க., தேனி நகர பொறுப்பாளரும், கவுன்சிலரான பாலமுருகன் தனது மனைவி ரேணுப்பிரியாவை நகராட்சி தலைவாக தேர்வு செய்யும் முயற்சியில் இருந்தார். இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவி காங்., ஒதுக்கப்பட்டது. கட்சி தலைமையின் உத்தரவை மீறி, எப்படியும் மனைவிக்கு தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டினார். இதனால் கவுன்சிலர்களிடம் சில வாக்குறுதிகளை அளித்து தனது மனைவிவை நகராட்சி தலைவர் ஆக்கினார். இதனை தொடர்ந்து தி.மு.க., நகர பொறுப்பாளர் பதவியில் பாலமுருகன் நீக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதன் காரணமாக கூட்டணி கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
தலைவர் பதவியை கைப்பற்றிய பின் தங்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றாததால் தி.மு.க., கவுன்சிலர்களும் அதிருப்தி அடைந்தனர். தலைவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்த நகராட்சியில் நடந்த சிறப்பு கூட்டத்தை பெரும்பான்மை தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
புகார்
துணைத்தலைவர் செல்வம் தலைமையில் அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்கள் 12 பேர் , 'நகராட்சி தலைவரின் கணவர் 3வது வார்டில் சாக்கடை அமைத்து தருவதாக பொதுமக்களிடம் பலரிடம் பணம் பெற்றது, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் வாரச்சந்தை மற்றும் கட்டண கழிப்பறையை குறைந்த தொகைக்கு ஏலம் விட பணம் பெற்றது, கவுன்சிலர்களை மிரட்டுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தெரிவித்து முதல்வர்,அமைச்சர்கள், நகராட்சி நிர்வாக இயக்குனர், கலெக்டர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பினர்.
தலைவர், கவுன்சிலர்களை சமாதானப்படுத்த மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் கம்பத்தில் கூட்டம் நடத்தினார். இதில் நகராட்சித் தலைவருக்கு ஆதரவாக பேசிய பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமாருக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை வெளியே அனுப்பினர். முடிவு ஏற்படாமல் கூட்டம் முடிந்தது.
தயார்
நகராட்சித்துணைத்தலைவர் கூறுகையில், கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நகராட்சி தலைவர், அவரது கணவர் செயல்படுகின்றனர். இதனால் அவரை மாற்ற கோரி தி.மு.க., கூட்டணியினர் மனு அனுப்பி உள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க., கூட்டணி மற்றும் வேறு சில கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் பலர் ராஜினாமா செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
அவதுாறு
நகராட்சித்தலைவர் ரேணுப்பிரியா, கணவர் பாலமுருகன் கூறுகையில்'' ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து தெரிவிக்க கம்பம் சென்றோம். கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ய உள்ளது பற்றி எதுவும் தெரியாது. எங்கள் மீது அவதுாறான வகையில் சிலர் தவறான தகவலை பரப்புகின்றனர். நகராட்சியில் நடந்த சிறப்பு கூட்டம், அறிவுசார் மையம் திறப்பு விழாவில் பங்கேற்காதது கவுன்சிலர்கள் விருப்பம் ''என்றனர்.
உள்கட்சி பிரச்னையில் திருநெல்வேலி தி.மு.க., மேயரை மாற்ற அக்கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளது போல் தேனி நகராட்சியிலும் தலைவருக்கு எதிராக தற்போது பிரச்னை துவங்கியுள்ளது.

