/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாய்க்காலில் தடுப்பு சுவர் இன்றி மண் அரிப்பால் சுருங்கிய பாதை; மயான ரோட்டில் கட்டிய ரேஷன் கடைக்கு செல்ல பெண்கள் அச்சம்
/
வாய்க்காலில் தடுப்பு சுவர் இன்றி மண் அரிப்பால் சுருங்கிய பாதை; மயான ரோட்டில் கட்டிய ரேஷன் கடைக்கு செல்ல பெண்கள் அச்சம்
வாய்க்காலில் தடுப்பு சுவர் இன்றி மண் அரிப்பால் சுருங்கிய பாதை; மயான ரோட்டில் கட்டிய ரேஷன் கடைக்கு செல்ல பெண்கள் அச்சம்
வாய்க்காலில் தடுப்பு சுவர் இன்றி மண் அரிப்பால் சுருங்கிய பாதை; மயான ரோட்டில் கட்டிய ரேஷன் கடைக்கு செல்ல பெண்கள் அச்சம்
ADDED : ஜன 17, 2024 01:02 AM

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 12வது வார்டு காயிதே மில்லத் நகரில் குடிநீர், ரோடு, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நகராட்சி 12 வது வார்டு வடகரை காயிதே மில்லத் நகரில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பெரியகுளம்- வத்தலகுண்டு ரோட்டில் நகராட்சி எல்லை துவங்கும் வாரிவாய்க்காலுக்கு மேற்புறத்தில் உள்ள வேலான்குளம், கடமான்குளம் மறுகால் பாயும் தண்ணீர் வருகிறது. குடியிருப்பு பகுதி அருகே செல்லும் வாரி வாய்க்காலுக்கும், குடியிருப்பு பகுதிக்கும் செல்லும் பாதை 20 அடி பாதை அகல பாதை இருந்தது. வாரி வாய்க்காலில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டு தற்போது டூவீலர் செல்லும் அளவிற்கு ஒத்தையடி மட்டுமே இடைவெளி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சென்றது. வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் பார்வையிட்டு வாரி வாய்க்காலை ஒட்டி 750 மீட்டர் நீள தடுப்பூச்சுவர் கட்டுவதற்கு அளவீடுகள் செய்தனர்.
என்ன காரணத்தினாலோ பணிகள் கிடப்பில் உள்ளது. இந்தப் பகுதி மக்களுக்கு மயானக்கரை ரோட்டில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.18 லட்சம் செலவில் ரேஷன் கடை சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பெண்கள் அச்சமடைந்து பாதுகாப்பு கருதி ரேஷன் கடைக்கு செல்ல மறுக்கின்றனர்.
இதனால் ரேஷன் கடை பல லட்சம் செலவில் கட்டப்பட்டும் பயன் இன்றி மூடப்பட்டுள்ளது. வார்டு மக்கள் ஒரு கி.மீ., தூரமுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் நிலை உள்ளது. காயிதே மில்லத் நகர் ஒட்டியுள்ள பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் நாளிதழின் குடியிருப்போர் குரல் பகுதிக்காக அப்பகுதியில் குடியிருப்போர் சிக்கந்தர்பீவி, ஜான்சி, ரஷியாபேகம், ராமுத்தாய், வீரையா ஆகியோர் பேசியதாவது: வாரிவாய்க்கால் தடுப்புச் சுவர் இல்லாததால் மழைக்காலங்களில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து விடும் என அச்சத்தோடு வாழும் அபாய நிலையில் உள்ளோம். இந்தப்பகுதிக்கு குடிநீர் வினியோகத்திற்கான பைப் லைன் அமைக்கப்படாததால் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
குப்பை, சாக்கடை அடிக்கடி சுத்தம் செய்யாததால் கொசுக்கடியில் அவதிப்படுகிறோம். கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர்கள் இப் பகுதியில் பன்றி வளர்க்கின்றனர்.
இவர்கள் இந்த பகுதியில் காய்கறி கழிவுகளை கொட்டி சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்துகின்றனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஒரு முறை இந்த பகுதிக்கு வந்து செல்ல வேண்டும். நாங்கள் படும் அவதியை அவர் கண்டு கொள்ள வேண்டும். போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து தெருவில் நடந்து செல்ல சிரமமாக உள்ளது.
தெருக்களில் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும்.
இப்பகுதியில் எப்போதும் ஒருவிதமான பயம் கலந்த சங்கடத்துடன் வாழ வேண்டிய மனநிலையில் உள்ளோம். காயிதே மில்லத் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை கட்ட வேண்டும். ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும் என்றனர்.

