/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எரிந்து சடலமாக கிடந்த தனியார் வங்கி பணியாளர்
/
எரிந்து சடலமாக கிடந்த தனியார் வங்கி பணியாளர்
ADDED : ஜன 26, 2024 01:37 AM

-தேவதானப்பட்டி:தனியார் வங்கியில் பணம் வசூல் செய்யும் பணியாளர் சூரியகுமார் கரட்டுப்பகுதியில் உடல் முழுவதும் எரிந்து சடலமாக கிடந்தார். கொலையா,தற்கொலையா என தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, குன்னூத்துபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் சூரியகுமார் 24. இவர் வத்தலகுண்டில் தனியார் வங்கியில் மகளிர் குழுக்களிடம் பணம் வசூலிக்கும் பணி செய்தார். இவருடன் குபேந்திரன் வேலை செய்துள்ளார். வசூல் செய்யும் பணத்தில் குபேந்திரன் குளறுபடி செய்ததால் வங்கி நிர்வாகம் குபேந்திரனை வேலையை விட்டு நிறுத்தியது.
ஆனாலும் குபேந்திரனுடன் சேர்ந்து பணம் வசூலித்து சூரியகுமார் வங்கியில் செலுத்தினார். சூரியகுமார் பிரச்னையில் இருப்பதை அறிந்து தந்தை பெரியகருப்பன் வங்கி கிளை மேலாளர் மாணிக்கத்திடம் விபரம் கேட்டுள்ளார். இதற்கு மேலாளர், சூரியகுமார் பெயரில் வசூல் செய்த பணம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார். சூரியகுமாரிடம் பணத்தை விரைவில் கட்டுமாறு பெரியகருப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சூரியகுமார் அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது சிறிய காயங்களுடன் சட்டை கிழிந்த நிலையில் வந்துள்ளார். வங்கியில் ஆடிட்டிங் நடப்பதால் சூரியகுமார் பணத்தை கட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஜன. 23ல் சூரியகுமாரை பெற்றோர் தொடர்பு கொள்ளமுடியவில்லை. திண்டுக்கல் மாவட்டம், விருவீடு போலீஸ் ஸ்டேஷனில் ஜன.24ல் மகனை காணவில்லை என பெரியகருப்பன் புகார் கொடுத்தார். போலீசார் தேடி வந்த நிலையில் தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி சீவல் கரடு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் சூரியகுமார் உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். கொலையா, தற்கொலையா என தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் விசாரித்து வருகிறார்.

