/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதிப்பு : வராகநதியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள்...: கூவமாக மாறும் ஆற்றை மீட்டெடுக்க வலியுறுத்தல்
/
பாதிப்பு : வராகநதியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள்...: கூவமாக மாறும் ஆற்றை மீட்டெடுக்க வலியுறுத்தல்
பாதிப்பு : வராகநதியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள்...: கூவமாக மாறும் ஆற்றை மீட்டெடுக்க வலியுறுத்தல்
பாதிப்பு : வராகநதியில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் ஆதாரங்கள்...: கூவமாக மாறும் ஆற்றை மீட்டெடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2025 12:45 AM

பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி கழிவுநீர் குள்ளப்புரம் கூட்டாறு அருகே வைகை அணை வாய்க்காலில் கலப்பதால், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்யும் மழை நீர் சோத்துப்பாறை அணைக்கு மேற்கே 30 கி.மீ., தூரத்தில் வராகநதியில் துவங்குகிறது. அங்கிருந்து 26 கி.மீ., தூரம் வாய்க்கால் வழியாக அடர்ந்த வனப்பகுதியில் வரும் தண்ணீர் தூய்மையாக வருகிறது. இதனை தொடர்ந்து வரும் நீர் வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோத்துப்பாறை அணையில் தேக்கி குடிநீர், விவசாய தேவைக்கு ஏற்ப வராகநதியில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தென்கரை,தாமரைக்குளம், வடுகபட்டி பேரூராட்சி, பெரியகுளம் நகராட்சி, ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவடகரை ஊராட்சியில் துவங்கி குள்ளப்புரம் ஊராட்சி வரை 17 ஊராட்சிகளில் தினமும் 2 லட்சம் மக்களின் தாகம் தணிக்கும் 'அட்சய பாத்திரமாக' வராகநதி திகழ்கிறது.
ஆற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீர்:
வராகநதியின் வடக்கு கரையில் உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பாதாளச் சாக்கடை வசதி இல்லை. இதனால் இப்பகுதி கழிவுநீர் வராக நதியில் ஐந்து இடங்களில் நேரடியாக கலக்கிறது. இதனையடுத்து பெரியகுளம் நகராட்சியில் ஓடும் வராகநதியில் சுதந்திரவீதி, மார்க்கெட் இறைச்சி கழிவுகளுடன் கழிவுநீரும் கலந்து பெரும் சுகாதார சீர்கேட்டை உருவாகிறது. பெரியகுளம் நகராட்சியில் 53ஆண்டுகளுக்கு மேலாக பாதாளச்சாக்கடை வசதி இருந்தும் கழிவுநீர் ஆற்றில் விடுவது வேதனையானது. இதனையடுத்து பங்களாபட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் வராகநதியில் கலந்து கூவமாக மாறியுள்ளது.
வராகநதியை காப்போம் திட்டம் முடக்கம்:
ஐந்து ஆண்டுகளுக்கு முன் 'வராகநதியை காப்போம்' என்ற திட்டத்தில் அழகாமடை முதல் பாம்பாறு வரை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வராகநதியில் கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரை பலப்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து பராமரிக்கவில்லை. தற்போது ஆற்றில் கால் வைக்க முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது.
குடிநீர் ஆதாரம் பாதிப்பு: வராகநதியில் பல கிராமங்களில் குடிநீர் ஆதாரங்களான உறை கிணறுகள் கழிவுநீரால் பாதிக்கப்படுகிறது. இந்த கழிவுநீர் குள்ளப்புரம் கூட்டாறு எனும் இடத்தில் வைகை அணை வாய்காலில் ஆயிரக்கணக்கான விட்டர் கழிவுநீர் கலக்கிறது. இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கான வைகை ஆறு வாய்க்காலில் அமைந்துள்ள குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுகிறது. வராகநதியை காப்போம் திட்டத்தை தொடர்ந்து பராமரிக்கவும்,வராக நிதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீர்வளத்துறை, குடிநீர் வாரியம் இணைந்து வராகநதியை பாதுகாக்க வேண்டும்.
--