/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆமை வேக சுரங்கப்பாதை பணியால் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
/
ஆமை வேக சுரங்கப்பாதை பணியால் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ஆமை வேக சுரங்கப்பாதை பணியால் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ஆமை வேக சுரங்கப்பாதை பணியால் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு போடி நகராட்சி புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் குமுறல்
ADDED : ஜன 10, 2024 12:21 AM

போடி : ஆமை வேகத்தில் நடக்கும் சுரங்கப்பாதை பணியால் தேங்கியுள்ள கழிவுநீர், சாக்கடை வசதி இன்றி ரோட்டில் செல்லும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு, குப்பை அகற்றாமல் தீ வைப்பதால் சிரமம் என போடி நகராட்சி 9 வது வார்டு புதுக்காலனி வெண்ணிமலை நகர் குடியிருப்போர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இங்குள்ள புதுக்காலனி வெண்ணிமலை தெரு, புதுக்காலனி முதலாவது, 2 வது தெரு, ஸ்பைஸ் வேலி பப்ளிக் பள்ளி தெரு, ஆதிபராசக்தி கோயில் தெரு உட்பட 20 க்கும் மேற்பட்ட தெருக்களில் 900 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதி குடியிருப்போர் நிர்வாகிகள் ரம்யா, நர்மதா, மாயக்காள், மகாலிங்கம், லட்சுமணன் கூறியதாவது :
ஆமை வேக சுரங்கப்பாதை பணியால் சுகாதார கேடு
போடி சுப்புராஜ் நகரில் இருந்து புதுக்காலனி செல்லும் ரோட்டின் இடையே அகல ரயில் பாதை அமைந்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் புதுக்காலனியில் இருந்து சுப்புராஜ் நகருக்கு அரை கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி 2 ஆண்டுகளாகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் சமீபத்தில் பெய்த கன மழை நீர், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், பாதாள சாக்கடை கழிவுநீரும் இணைந்து சுரங்க பாதையில் தேங்கி வருகிறது. இதனால் அருகே குடியிருக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசு தொல்லையால் பல்வேறு சிரமம் ஏற்படுகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணி ரயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும். சுரங்க பாதைக்கு கழிவுநீர் செல்லாமலும், ரோட்டில் கழிவு நீர் தேங்காத வகையில் சாக்கடை வசதி, மாற்று வழியில் கழிவுநீர் செல்வதற்கான தடுப்புகள் அமைத்து சுகாதாரம் பாதுகாக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு வசதி தேவை
புதுக்காலனி 4 வது குறுக்கு தெருவில் ரோடுக்கான பாதை இருந்தும் ரோடு வசதி இன்றி குண்டும் குழியுமாக மண் மேடுகளாக உள்ளது. பாதையில் ஆழ்துளை குழாய் அமைத்து பல ஆண்டுகளான நிலையில் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் வாகன போக்குவதற்கு இடையூறாகவும், மழை காலங்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்குகிறது. இதனால் அவசரத்திற்கு நோயாளிகள் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் தெருவில் செல்ல முடியாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குண்டும், குழியுமாக ரோட்டை சீரமைத்து, வாகனங்கள் செல்லும் தார் ரோடு வசதி செய்து தர நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு பெயர் பலகை தேவை
9 வது வார்டில் நகராட்சி பெயர் பலகைகள் அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் அதில் பெயர்கள் அழிந்து காட்சி பொருளாக உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு தெரு பெயர்களை தெரிந்து கொள்ள முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இப்பாதையில் ரோடு, குடிநீர், சாக்கடை வசதி செய்து தருவதோடு முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

