ADDED : ஜன 10, 2024 12:47 AM

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் ஆளும் இடது சாரி கூட்டணியினர் நேற்று நடத்திய 'பந்த்' தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
கேரளாவில் நிலம் பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த செப்டம்பரில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் கையெழுத்திட காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதனை கண்டித்து இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இடது சாரி கூட்டணியினர் நேற்று கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். அதேசமயம் வர்த்தக சங்கத்தினர் சார்பில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆரிப் முகம்மது கான் பங்கேற்றார்.
சட்ட திருத்த மசோதாவில் கையெழுத்திடாததை கண்டித்தும், இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று கவர்னர் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளும் இடது சாரி கூட்டணி சார்பில் மாவட்ட அளவில் நேற்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை 'பந்த்' நடந்தது.
அதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றில் பணிகள் முடங்கின. அரசு பஸ்கள் இயங்கிய நிலையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுற்றுலா நகரான மூணாறில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கேரள அரசு பஸ்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்பட தனியார் வாகனங்கள் ஓடின. தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பயணிகள் உணவு இன்றி தவித்தனர்.
வனத்துறைக்குச் சொந்தமான இரவி குளம் தேசிய பூங்கா வழக்கம் போல் செயல்பட்டது. மாட்டுபட்டி அணையில் சுற்றுலா படகுகள் இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

