ADDED : ஜூன் 28, 2025 12:51 AM
கணவரை பிரிந்தமனைவி தற்கொலை
தேனி: குச்சனுார் அருகே கே.துரைசாமிபுரம் வடக்குத்தெரு அழகேஸ்வரி 36. இவரது கணவர் பாண்டி 40. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவரின் நண்பர்மல்லையக்கவுண்டன்பட்டியை சேர்ந்த பொம்முராஜ் என்பவருடன், அழகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் 6 மாதங்களுக்கு முன் அழகேஸ்வரி கணவரைபிரிந்து பழனிசெட்டிபட்டியில் பொம்முராஜூவுடன் வாழ்ந்தார்.இந்நிலையில் அந்த வீட்டில் கடந்த ஜூன் 20ல் விஷம் குடித்துதற்கொலை செய்துள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மகள் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தாயார் பாண்டியம்மாள் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை புகையிலை கடத்தியவர் கைது
கூடலுார்: கேரளா குமுளி இன்ஸ்பெக்டர் சுஜித் தலைமையில் போலீசார் எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தமிழகப் பகுதியில் இருந்து வந்தவரிடம் சோதனை செய்தபோது 12 பைகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர் குமுளி ரோசாப்பூக் கண்டத்தைச் சேர்ந்த ரபிக் 52, என தெரிய வந்தது. இவரை கைது செய்து புகையிலையை பறிமுதல் செய்தனர்.
வீட்டை உடைத்து நகை திருடியவர் கைது
கூடலுார்: கூடலூர் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவமூர்த்தி வெளியூர் சென்றிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3.50 பவுன் தங்க நகை, ஒரு அலைபேசி, ரொக்கம் ரூ.11 ஆயிரம் திருடு போனதாக கூடலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்.ஐ., கருப்பையா மற்றும் தனி பிரிவு போலீசார்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அஜித்குமார் 32, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த தங்க நகை, அலைபேசி மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருடப்பட்ட ஒரே நாளில் குற்றவாளியை கண்டுபிடித்து திருடப்பட்ட தங்க நகை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை பாராட்டினர்.