/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாசன வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம்; தொற்று நோயை தோரணம் கட்டி வரவேற்கும் பெரியாறு, பி.டி.ஆர்., வாய்க்கால்கள்
/
பாசன வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம்; தொற்று நோயை தோரணம் கட்டி வரவேற்கும் பெரியாறு, பி.டி.ஆர்., வாய்க்கால்கள்
பாசன வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம்; தொற்று நோயை தோரணம் கட்டி வரவேற்கும் பெரியாறு, பி.டி.ஆர்., வாய்க்கால்கள்
பாசன வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம்; தொற்று நோயை தோரணம் கட்டி வரவேற்கும் பெரியாறு, பி.டி.ஆர்., வாய்க்கால்கள்
ADDED : ஜூன் 15, 2025 07:07 AM

சின்னமனுார் : சின்னமனுாரில் இரண்டு மாதங்கள் மட்டும் பாசன வாய்க்காலாக பயன்படும் பெரியாறு, பி.டி.ஆர்.வாய்க்கால்கள் 10 மாதங்கள் சாக்கடை, செப்டிக் டேங்க் கழிவுகள், குப்பை கொட்டும் இடமாக மாறி தொற்று நோய்களை தோரணம் கட்டி வரவேற்கிறது.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 40 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. நகராட்சியில் குப்பை அகற்றம், சாக்கடை சுத்தம் செய்தல் பணிகளில் பெரும் தேக்கநிலை உள்ளது. நகராட்சி துாய்மை பணி முறையாக மேற்கொள்ளாததால் நகரின் குடியிருப்புகள் வழியாக செல்லும் பாசன வாய்க்காலை கழிவுகள் சேகரமாகும் இடமாக மாறி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. பெரியார், பி.டி.ஆர்., வாய்க்கால்கள் மூலம் தேனி ஒன்றியம் தப்புக்குண்டு, தாடிச்சேரி, பாலகிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கோட்டூர், சீலையம்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம், அரண்மனைபுதூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 5100 ஏக்கரில் ஒரு போக சாகுபடி நடைபெறகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் பெரியாறு, பி.டி.ஆர்.,வாய்க்கால்களில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். வானம் பார்த்த பூமிகளாக உள்ள இப்பகுதியில் வாய்காலில் வரும் நீரால் ஒருபோக சாகுபடி வாழ்வாதாரமாகும். 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பயன்படுகிறது.
வாய்க்காலில் விடப்படும் கழிவுகள்:
இந்த பாசன வாய்க்கால் உத்தமபாளையம் அருகில் உள்ள ராமசாமிநாயக்கன்பட்டியில் ஆரம்பமாகி சின்னமனூர் வழியாக சென்று கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி அருகே செல்லும் போது சுரங்க பாதை வழியாக நகருக்குள் செல்கிறது. ஒரு கி.மீ. தூரத்திற்கு நகருக்குள் சுரங்க பாதையில் செல்லும் இந்த வாய்க்கால், சக்தி மாரியம்மன் கோயில் அருகே மீண்டும் திறந்த வெளியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்கிறது. காந்திநகர் காலனி, சாமிகுளம் பகுதிகள் இந்த வாய்க்காலின் இரண்டு கரைகளிலும் உள்ளது. இரு பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளின் கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு வாய்க்காலில் விடப்படுகிறது. குப்பை கிடங்காகவும் வாய்க்காலில் தேங்குகிறது
பத்து மாதங்கள் குப்பை தேங்கும் வாய்க்கால்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரியில் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் பாசனத்திற்கு செல்லும் அப்போது மட்டும் குப்பை, கழிவு நீர் கலப்பதும் வெளியே தெரியாது. காரணம் கழிவுகள்நீரில் அடித்து சென்று விடும். எஞ்சிய 10 மாதங்களும் கால்வாயில் தண்ணீர் வராது. அந்த காலங்களில் சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு நீர், குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்களை தோரணம் கட்டி வரவேற்கும் இடமாக காட்சியளிக்கும்.
நகராட்சி நிர்வாகம் சமீபத்தில் இந்த வாய்க்காலை தூர்வாரியது. இது தற்காலிக தீர்வுதான். சாக்கடை கழிவு நீர், செப்டிக் டேங்க் கழிவு நீர் கலக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். நகரின் பாதி தூரத்திற்கு அமைக்கப்பட்ட சுரங்கம் போன்று எஞ்சிய பகுதியிலும் சிமென்ட் சிலாப்புகளால் வாய்க்கால் மூட வேண்டும்.
சிமென்ட் சிலாப்பால் மூட வேண்டும்
ராமர், தாளாளர், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , சின்னமனூர் :
கடந்த 1980 ல் வாய்க்கால் பயன்பாட்டிற்கு வந்த போது, இந்த பகுதி முழுவதும் காடாக இருந்தது. குடியிருப்புக்கள் இல்லை. எனவே திறந்த வெளியில் தண்ணீர் சென்றது. 2010 க்கு பின்பு தான் வாய்க்காலின் இரு கரைகளிலும் குடியிருப்புக்கள் அதிகரித்தது. வாய்க்காலின் இருபுறமும் சாக்கடை வசதி செய்யததால் கழிவு நீர் வாய்க்காலுக்குள் செல்கிறது. நகராட்சி குப்பை அகற்றுகிறது. குப்பை தொட்டி வைக்க மறுக்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு வாய்க்காலை சிமென்ட் சிலாப் கொண்டு மூட நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாய்க்கால் பராமரிப்பை
வேலு, ஓய்வு ஆசிரியர்: பி.டி.ஆர். வாய்க்கால் கரையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சுகாதார கேடு உளளது. கரைகளில் வசிக்கும் பொதுமக்களும் சுகாதார கேட்டால் பாதிக்கப்படுகின்றனர். குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக கழிவு நீர் வாய்க்காலில் விடுவதை நிறுத்த வேண்டும். வேறு தெருக்களில் இருந்து இரவு நேரங்களில் டூவீலர்களில் குப்பைகளை சாக்கு பைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். கோயில் திருவிழாக்கள் முடிந்த பின் பூக்களை கொட்டுகின்றனர்.
தீர்வு
சிமென்ட் சிலாப்பால் மூட வேண்டும்
இந்த வாய்க்காலை சுரங்க பாதை அமைப்பது போல் சிமென்ட் சிலாப் மூலம் மூடி நீர்வளத்துறை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு வாய்க்காலில் கலக்காத வகையில் வடிகால் வசதி செய்திட வேண்டும். அப்போதுதான் பாசன வாய்க்கால் பாதுகாக்க முடியும்