/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
/
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
ADDED : ஜூன் 16, 2025 05:27 AM

ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. அணையின் நீர் இருப்பை பொறுத்து ஆண்டுதோறும் ஜூனில், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
தற்போது அணையில் நீர் இருப்பு போதியளவு இருப்பதால் நேற்றிலிருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டது. தமிழக அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, கலெக்டர்கள் ரஞ்ஜீத் சிங் (தேனி), சங்கீதா (மதுரை), சரவணன் (திண்டுக்கல்) முன்னிலையில் அணையின் பெரிய மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டது.
பின் அமைச்சர் பெரியசாமி கூறியதாவது: பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன பகுதிகளில் முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு தினமும் 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கன அடி நீர் கால்வாய் வழியாக செல்லும். விவசாயிகள் குறுகிய கால பயிர்களை நடவு செய்தும் நீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிக மகசூல் பெற வேண்டும்.
நீர் திறப்பால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16 ஆயிரத்து 452 ஏக்கர், மதுரை வடக்கு தாலுகாவில் 26 ஆயிரத்து 792 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.
எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி), ராமகிருஷ்ணன் (கம்பம்), சரவணகுமார் (பெரியகுளம்), அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று வைகை அணை நீர்மட்டம் 61.22 அடியாக இருந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1230 கன அடி. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.