/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
/
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
'ஜல்ஜீவன்' திட்டப்பணி முடங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு; கூட்டுக்குடிநீர் முழுமையாக கிடைக்காததால் ஜெயமங்கலம் ஊராட்சியில் தவிப்பு
ADDED : பிப் 06, 2024 12:28 AM

தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் ஊராட்சியில் 'ஜல்ஜீவன்' திட்டப் பணிகள் முழுமையடையாததால் கோடையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஜெயமங்கலம் ஊராட்சியில் 9 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். வ. உ. சி., தெரு, காந்தி நகர், ரைஸ்மில் தெரு, ஹாஸ்டல் தெரு அங்கன்வாடி தெரு, முனியாண்டி கோயில் தெரு, மேலதெரு, இஸ்லாமியர் தெரு உட்பட 30க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன.
இதன் உட்கடை கிராமமான இளந்தோப்பு பகுதியில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. ஜெயமங்கலத்தில் பெரும்பாலான பகுதிகளில் போர்வெல் நீரையே குடிநீராக வழங்குவதால் இவை குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.
சோத்துப்பாறை, வைகை அணை கூட்டு குடிநீர் திட்டங்களில் இருந்து தினமும் 6 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும். ஆனால் 2 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்குவதால் 3நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஊராட்சி நிர்வாகம் கேள்வி கேட்பதில்லை. மேலும் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தில் கிணறு வெட்டும் பணி குழாய் பதிக்கும் பணி முழுமை பெறாமல் ஒப்பந்ததாரர் மெத்தனத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இவ்வூராட்சியில் சாக்கடை வசதி, சுகாதார வளாகம், ரோடு உட்பட அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெறாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஜெயமங்கலம்- வைகை அணை ரோட்டில் ரோடு அமைக்க நடு ரோட்டில் ஜல்லி கற்களை கொட்டியுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஜெயமங்கலம் வராகநதி குறுக்கே கருப்பண்ணன் கோயில், பெருமாள் கோயில், பெரியதோப்பு ஆகிய மூன்று இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பாலம் அமைக்க ஊராட்சி நிர்வாகமும், நீர் வள ஆதார அமைப்பினர் கண்டு கொள்வதில்லை.இதனால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
விரைவாக கெடும் சாதம்
தேவி, ஜெயமங்லம்: முதல் வார்டு கணேசபுரம் வழியாக செல்லும் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து குடிநீர் வழங்க கோரி பல ஆண்டுகளாக ஊராட்சியிலும், ஒன்றிய நிர்வாகத்திலும் கோரிக்கை வைத்து பொதுமக்கள் ' தவித்துப் போய்விட்டோம்'. லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தலின் போது ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் குடிநீருக்காக நாங்கள் படும் அவதியை கேட்டு உடனே செய்கிறோம் என கூறி ஓட்டு வாங்கி செல்கின்றனர்.
ஐந்து ஆண்டுகளாகியும் நாங்கள் போர்வெல் தண்ணீரை குடிக்கும் அவல நிலையில் உள்ளோம். போர்வெல் தண்ணீர் உப்பு படிவதால் சமையல் செய்யும் சாதம் மூன்று மணி நேரத்துக்குள்ளே கெட்டு போகிறது. விரைவில் சோத்துப்பறை குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார வளாகம் இன்றி சிரமம்
ராஜபாண்டி, ஜெயமங்கலம்: 3,8,9 வார்டுகள் உள்ளடங்கிய காந்திநகர் காலனி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்கள், பெண்களுக்கான சுகாதார வளாகம் இல்லை. இதனால் இயற்கை உபாதைக்கு காட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. ஊராட்சி திருமண மண்டபத்தில் குளியலறை மூடி கிடக்கிறது. கழிப்பறை வசதி இல்லாததால் மணமக்கள் உள்பட அனைவரும் சிரமப்படும் நிலை உள்ளது.
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு
திருப்பதி, ஜெயமங்கலம்: ஹாஸ்டல் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு ரோடு முழுவதுமாக சேதம் அடைந்து ஏற்றம், இறக்கமாக உள்ளது.
இதனால் இரவில் தினமும் பலர் விழுந்து காயப்படுகின்றனர். இங்குள்ள தெரு குழாய்கள் அருகே செல்லும் சாக்கடை மூடி இல்லாததால், குடிதண்ணீரும், சாக்கடை கலந்து கொசு, புழுக்கள் ஒன்றாக கலந்து குடத்தில் சேகாரமாகிறது.
ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கேட் அமைக்காததால் இரவில் சிலர் வகுப்பறைகளை மதுபார்களாக பயன்படுத்துகின்றனர். பள்ளி நாட்களில் நாய்கள், கால்நடைகள் பள்ளி வளாகத்தில் சுற்றி வருவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.
ரூ.4.50 கோடிக்கு வளர்ச்சிப்பணிகள்
அங்கம்மா, ஊராட்சி தலைவர் ஜெயமங்கலம்: 13வது நிதி குழு மாநிலத்தில் ரூ.80.15 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வார்டுகளுக்கும் வடிகால் வசதியுடன் பேவர் பிளாக் கற்கள், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு பயிற்சி மையம். 15 வது நிதிக்குழு மானியத்தில் உதயம் நகரில் ரூ.5.40 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் குறைவாக வழங்குவது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம். விரைவில் அடிப்படை பிரச்னைகள் சரி செய்யப்படும் என்றார்.