/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
/
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஜூன் 22, 2024 01:57 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில் ஆனித்தேரோட்டம் நேற்று நடந்தது. துவக்கத்தில் கயிறால் ஆன தேர் வடம் அறுந்து விழுந்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
நெல்லையப்பர் தேர் 450 டன் எடை கொண்ட தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகும். இக்கோயில் 518வது ஆனித்திருவிழா கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மாலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. நேற்று அதிகாலை சுவாமி - அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 6:40 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா உள்ளிட்டோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
வடம் அறுந்தது
சுவாமி தேர் இழுக்க துவங்கும் போது கயிறால் ஆன தேர் வடம் அறுந்தது. இதனால் பக்தர்கள் அதிருப்தி, வருத்தம் அடைந்தனர். அடுத்தடுத்து கொண்டுவரப்பட்ட வடங்களும் அறுந்தன. பின்னர் இரும்பு சங்கிலியால் தேர் இழுக்கப்பட்டது. பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து தேர் வடம் கொண்டுவரப்பட்டது. வழக்கமாக மதியமே சுவாமி தேர் நிலையம் அருகில் போத்தீஸ் முக்கு வந்தடையும். ஆனால் வடம் அறுந்ததால் தாமதம் ஏற்பட்டது.
சுவாமி தேரை தொடர்ந்து தொடர்ந்து காந்திமதி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.
வடம் அறுந்த நிலையில் தேரில் உள்ள மரக்குதிரைகளும் உடைந்து பராமரிக்கப்படாமல் இருந்தன. திருவிழா துவங்கிய இரண்டாவது நாளில் சப்பரம் கோயிலில் இருந்து வரும்போது கோயில் வாசலில் சப்பரத்தை தூக்கி செல்லும் தண்டயம் உடைந்தது. தேரோட்டத்தின் போது ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் முறையாக செயல்படவில்லை எனவும் மேம்போக்கான ஆய்வுகள் செய்ததாகவும் குற்றம் சாட்டினர்.